×

அறநிலையத்துறை 3 கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு 60 கிராமங்களை சேர்ந்த 10,000 பேர் ஆர்ப்பாட்டம்

மேலூர்: மேலூர் அருகே 3 கோயில்களை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்துவதாக நோட்டீஸ் அனுப்பவே, கொதித்து எழுந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையிடமாக கொண்ட பகுதியை இன்றளவும் இப்பகுதி மக்கள் வெள்ளலூர் நாடு என்றே அழைக்கின்றனர். இப்பகுதிக்கென அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில், வெள்ளலூர் மந்தைக்கருப்பு கோயில், குறிச்சிப்பட்டி ஏழை காத்தம்மன் கோயில் என பாரம்பரியமாக 3 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள துவங்கினர்.

தங்கள் கோயில்களை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தக்கூடாது என எண்ணிய 60 கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர், நேற்று காலை வெள்ளலூர் மந்தையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதுரையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள், நேரில் வருவதாக கூறி அவர்களை வெள்ளலூரிலேயே தங்க வைத்தனர். தொடர்ந்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், ஆர்டிஓ சிவகாமி உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் வெள்ளலூர் வந்தனர். அப்பகுதியில் அனைத்து கடைகளையும் அடைத்து விட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன் பேசுகையில், ‘‘35 வருடத்திற்கு முன்பே இந்த கோயில்கள் அறநிலையத்துறை கண்காணிப்பிற்குள் வந்து விட்டன. இந்த கோயில்களுக்கு என 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கலாம். அதில் கிராம முக்கியஸ்தர்களே இருக்கலாம். கணக்கு வழக்குகளை மட்டும் ஆடிட்டரை வைத்து பொதுவாக பார்க்கலாம்’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், ‘‘கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிட கூடாது’’ என கோஷங்களை எழுப்பினர். தாங்கள் பாரம்பரியமாக வணங்கி வரும் கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, உடனடியாக கோயிலை கையகப்படுத்த மாட்டோம் என அதிகாரிகள் உறுதியை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : villages ,temples ,takeover , Department of Charity, Demonstration
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு