×

விவசாய பம்ப் செட்டுகளில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் எடுப்பதா?: கிராம விவசாயிகள் எதிர்ப்பு

சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, பக்கத்து மாவட்டமான திருவள்ளூரை சுற்றியுள்ள விவசாய பம்ப் செட்டுகளில் இருந்து ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீரை தேடி அலைகின்றனர். சென்னையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால், காணும் இடங்களில் எல்லாம் வெள்ளமாக இருந்தது. இத்தகைய வெள்ள நீரை மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களை பயன்படுத்தி தமிழக அரசு சேமிக்க தவறியதால், அந்த நீர் கடலில் வீணாக கலந்தது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பெய்யும் மழை நீரை சேமிக்க அரசு முனைப்பு காட்டுவதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நடப்பு ஆண்டில் கோடைகாலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரித்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் தண்ணீருக்காக படாதபாடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், சாலை மறியல்களும் நடந்து வருகின்றன. எனினும் அந்த சமயத்தில் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்வதோடு சரி. நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளும் வறண்டு விட்டதால், திருவள்ளூரை சுற்றியுள்ள கிராம விவசாயிகளின் பம்ப் செட்டுகளில் இருந்து, ராட்சத மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இதற்கு, மாவட்ட விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயமே நலிந்து வரும் நிலையில், திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நிலத்தடி நீர் எடுத்தால், 150 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாய பயிர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது’’ என்றனர். விவசாய பம்ப் செட்டுகளின் மூலமாவது தண்ணீர் எடுத்து சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை கொஞ்சமாவது போக்கிக் கொள்ளலாம் என்று மாநகர மக்களும், தமிழக அரசும் நிம்மதி அடைந்த நிலையில் இந்த திட்டத்துக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : pump sets ,farm , Agricultural Pump Set, Madras, Drinking Water, Village Farmers
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி