தண்ணீர் பற்றாக்குறையால் பிரச்னை: தனியார் பள்ளி விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால், தனியார் பள்ளி, திடீரென அரை நாள் விடுமுறை அறிவித்தது. இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, அப்பள்ளியில் ஆய்வு செய்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் பிஎஸ்கே தெருவில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்படுகிறது. இங்கு 1 முதல் 10ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது, தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், தனியார் பள்ளியையும் விட்டு வைக்கவில்லை. 2 நகராட்சி குடிநீர் இணைப்புகள், 2  நிலத்தடி போர் இருந்தும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீர் பற்றாக்குறை காரணமாக, பள்ளி நிர்வாகம் சார்பில் 1 முதல் 5ம் வகுப்புவரை காலை மட்டும் பள்ளி செயல்படும். பிற்பகல் விடுமுறை என கூறி, அறிவிப்புப் பலகை  வைக்கப்பட்டது. பள்ளி கல்வி துறை அதிகாரிகளின் எவ்வித உத்தரவும் இல்லாமல், தனியார் பள்ளிக்கு அரைநாள் விடுப்பு அளித்ததை அறிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, மேற்கண்ட தனியார் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அங்கு எந்தவித முன் அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததை கண்டித்தார். மேலும், தண்ணீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி விடுமுறை என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகமும் வேறு வழியின்றி விடுமுறை அறிவிப்பை ரத்து செய்து அனைத்து வகுப்புகளும் வழக்கம்போல மாலை வரை இயங்கும் என தெரிவித்தனர்.

Tags : private school holidays announcement , Water shortages, private school, holidays
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனையில்...