×

விவசாய நிலங்கள், வீடுகள் பாதிப்பு: உயர் அழுத்த மின்கோபுரத்தை எதிர்த்து வழக்கு

சென்னை: சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து தமிழகம் வரை அமைக்கப்பட்டு வரும் உயர் அழுத்த மின் வழித்தடம் மற்றும் மின்கோபுரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ரெய்காரில் இருந்து கரூர் மாவட்டம் புகழூர் வரை 1853 கிலோ மீட்டர் தூரம் 800 கிலோவாட் உயர் மின் வழித்தடத்தை கொண்டு வர இந்திய பவர் கிரிட் கழகம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. மொத்தம் 4350 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த உயர் மின்அழுத்த கம்பி வழித்தடம் சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் செல்கிறது. இந்த மின் இணைப்புக்காக 5530 உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மேல் மின் வழித்தடம் செல்கிறது.

இந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க கோவை,திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி உயர் மின்வழித்தடம் செல்லும் பகுதிக்கு நேரில் ஆய்வு செய்தபோது, அவர் கையில் வைத்திருந்த டியூப்லைட் எந்த இணைப்பும் இல்லாமல் எரிந்ததை கண்டு அதிர்ச்சி  அடைந்தார். இது பொதுமக்கள் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 8 விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,  உயர்மின்கோபுரம் அமைப்பதால் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு ஏற்படுகிறது. நேரடியாக மின் அலைகள் மனித உடலில் பாய்வதால், கேன்சர் உள்ளிட்ட உயிர்பலிவாங்கும் நோய்கள் பாதிக்கும்.

விவசாயமும் கடுமையாக பாதிக்கும். எனவே, இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி ஆஜரானார். அப்போது ஈரோடு எம்பி அ.கணேசமூர்த்தி ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,  கடந்த  சனிக்கிழமை ஈரோடு அருகே விஜயமங்கலம் மூணாம்பள்ளி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளைப் பார்வையிட சென்றபோது விவசாயிகள் கொண்டு வந்த டியூப்லைட் எந்த இணைப்பும் இல்லாமல் எரிந்ததைக் கண்டு  அதிர்ச்சி அடைந்தேன். டெஸ்டரை உடலில் வைத்து பார்த்தபோது டெஸ்டரிலும் விளக்கு எரிந்தது. எனவே, இதுகுறித்து உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கு விசாரணையின்போது பவர் கிரிட் கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.இதேபோல், வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி தாலுகாவை சேர்ந்த மேகநாதன், கோவிந்தன், ஜானகி ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், 800 கிலோவாட் மின் அழுத்த கம்பி வீடுகளுக்கு மேல் செல்வதால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விவசாயத்தையும் பாதிக்கிறது. எனவே, இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Agricultural Lands ,Mintope , Agricultural Lands, Housing Impact, Case
× RELATED பிளவக்கல் அணையில் 34 அடி தண்ணீர் இருப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி