×

தண்ணீர் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள் தமிழக அரசு சரியான முயற்சி எடுக்கவில்லை என்பது உண்மை: தங்கபாலு குற்றச்சாட்டு

சென்னை:  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் 49வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் ராகுல் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.  இதில் மூத்த தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, ஜெ.எம்.ஆரூண், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவ ராஜசேகரன் மற்றும் தாமோதரன், பவன்குமார், ரங்கபாஷ்யம் இரா.மனோகர், ஜி.கே.தாஸ், எஸ்.கே.நவாஸ், சூளை ராஜேந்திரன், ஹசன் ஆரூண், ரஞ்சன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஹசன் ஆரூண் தலைமையில் ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. மகிளா காங்கிரஸ் சார்பில் மாநில தலைவி ஜான்சி ராணி தலைமையில் துணை தலைவி மைதிலி தேவி, மாவட்ட தலைவி மதரம்மாகனி உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா சாலை தர்கா முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

விழாவில் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி தொடர் ந்து தலைவராக இருக்க வேண்டும் என்று எங்கள் வேண்டுகோளை வைத்துள்ளோம். ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜ அரசு பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு தங்கள் கொள்கைகளை முன்னிலைப்படுத்த நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினை துவேஷத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சி எடுக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று.  எதிர்கட்சிகளை அழைத்து பேச வேண்டும். எல்லாரும் ஒருங்கிணைந்து முடிவு செய்தால் மட்டுமே இந்த காரியம் இயல்பாக முடியும். எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இது செயல்பாட்டுக்கு வராது. எல்லா எதிர்கட்சிகளும் சேர்ந்து ஆதரித்து அது செயல்பாட்டுக்கு வந்தால் அதை ஆதரிப்போம்.

மக்களுக்கு அல்லாத கொள்கைகளை காங்கிரஸ் எதிர்க்கும். தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் என்பது உண்மையான விஷயம். அதை தவிர்ப்பதற்கு மாநில அரசு சரியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பது எல்லோருக்கு தெரிந்த ஒன்று. ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்வதை ஏற்க முடியாது. மக்களுக்கு தண்ணீர் கொடுக்க இந்த அரசு முயற்சிக்க வேண்டும். குறைந்தபட்ச தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அந்த கஷ்டத்தை போக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : government ,Tamil Nadu , Water Problem, Government of Tamil Nadu, Thangalpalu
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...