×

எண்ணூரில் ரவுடி காயமடைந்த சம்பவம்: துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு வலை

சென்னை: சென்னை எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (32), பிரபல ரவுடி. இவர்மீது கொலை, கொள்ளை உள்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் ரமேஷ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ரமேஷ், கடந்த 7ம் தேதி இரவு அதே பகுதியில் தனது கூட்டாளிகளான அலெக்சாண்டர் (30), செந்தில்குமார் (25) மற்றும் சிலருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, அலெக்சாண்டருக்கும் செந்தில்குமாருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அலெக்சாண்டருக்கு ஆதரவாக, தனது கைத்துப்பாக்கியால் செந்தில்குமாரை நோக்கி ரமேஷ் சுட்டுள்ளார். இதில் செந்தில்குமாரின் இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷ், அலெக்சாண்டர் உள்ளிட்ட சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ் மற்றும் அலெக்சாண்டரை ைகது செய்தனர். அவர்களிடம் இருந்து அனுமதியின்றி வைத்திருந்த கள்ள துப்பாக்கி மற்றும்  2 தோட்டக்களை பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்டவர்களை புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து ரமேஷிடம் விசாரித்தபோது, அன்னை சிவகாமி நகரில் ரவுடி தனசேகரால் தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக, நான் ஜெயிலில் இருக்கும்போது, அங்கு தண்டனை கைதியாக இருந்த பிரபல ரவுடி சித்திக் என்பவரிடம் துப்பாக்கி கேட்டேன். அவர், தண்டையார்பேட்டையில் உள்ள தனது உறவினர் சையத் என்பவரை தொடர்பு கொள்ளும்படி கூறினார். இதையடுத்து நான் ஜாமீனில் வெளிவந்தவுடன், சையதை சந்தித்து, அவன் மூலமாக மகாராஷ்டிர மாநிலம் சென்று, அங்கு கள்ள துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கி வந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன் ரவுடி தனசேகரின் கூட்டாளி சதீஷ், எனது கூட்டாளி குட்டியான் என்பவரை முட்டி போடவைத்து, துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டி அனுப்பினார்.

இதனால் என்னிடமும் உள்ளது என்பதை தனசேகர் அறிந்து கொள்ள துப்பாக்கியுடன் சுற்றி வந்தேன், அப்போது அந்த துப்பாக்கி வெடித்து செந்தில்குமாரின் மீது பாய்ந்தது என போலீசாரிடம் ரமேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரமேஷுக்கு துப்பாக்கி சப்ளை செய்த ரவுடி சையத்தையும், துப்பாக்கி காட்டி மிரட்டிய சதீஷ், குட்டியான் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடி சையது பிடிபட்டால்தான், இதேபோல் எத்தனை ரவுடிகளிடம் கள்ளத் துப்பாக்கி உள்ளன என்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். ரமேஷிடம் கைப்பற்றிய துப்பாக்கி 5 எம்எம் அளவு கொண்டது. அது நெற்றி மற்றும் மார்பில் வைத்து சுட்டால்தான் உயிர் போகும் என கூறப்படுகிறது. இதனாலேயே செந்தில்குமாரின் இடுப்பில் துப்பாக்கி குண்டு காயம் பட்டும் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.

Tags : Rowdy ,Nurpur ,gun supplier , Nunnur, Rowdy, Gun Supply
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...