×

பிஇ தரவரிசை பட்டியல் இன்று காலை வெளியாகிறது

சென்னை: தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. இந்த பட்டியல்கள் 4 நாட்கள் இணைய தளத்தில் பார்க்க முடியும். கடந்த மே மாதம் 2ம் தேதி தொடங்கிய பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் பணிகள், அம்மாதம் 31ம் தேதி வரை நடந்தது. இதற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 46 சேவை மையங்கள் மூலம் ஜூன் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பிஇ, பிடெக் படிப்புகளில் சேர இந்த ஆண்டு  1 லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 418 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில்  பங்கேற்றனர்.  நடப்பு கல்வியாண்டுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகள் நிறைவு பெற்று,  17ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் சான்று சரிபார்ப்பில் பங்கேற்ற பல மாணவர்கள் சில சான்றுகளை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்களிடம் சான்றுகளை பெறுவதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது.   சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க இயலாத சில மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்தவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த இடைவெளியில் பிரச்னைகளை சரிசெய்து, அவர்களது பெயரையும் தரவரிசை பட்டியலில் இடம்பெறச் செய்யும் வகையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நாள் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை தரவரிசைப் பட்டியலை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிடுகிறது. தரவரிசை பட்டியலை இணைய தளத்தில் 4 நாட்கள் பார்வையிட முடியும். இந்த பட்டியலில் தவறு நேர்ந்திருப்பினும், சந்தேகங்கள் ஏற்பட்டால் 044-22351014, 22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : PS , BE, ranking list
× RELATED சூளகிரியில் அவரை விளைச்சல் அமோகம்