×

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: மோடியின் யோசனைக்கு காங்கிரஸ், திமுக உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிரதமரின் யோசனைக்கு  காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமென பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் தேர்தல் செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்த முடியுமென அவர் கூறி வருகிறார். இதற்காக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆலோசனை நடத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று  நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கட்சித் தலைவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும் மோடி வலியுறுத்தி இருந்தார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல் நபராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினமே அறிவித்தார். மிக முக்கியமான இந்த சீர்த்திருத்தம் குறித்து அவசர கதியில் முடிவெடுக்க முடியாது என கூறிய அவர், அரசு வெள்ளை அறிக்கை கொடுத்து அனைத்து கட்சிகளுக்கும் போதிய அவகாசம் அளித்தால் பரிந்துரையை தெரிவிப்பதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து நேற்று காலை மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்தனர். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வரும் ராஷ்டிரிய தெலங்கானா சமீதி தலைவருமான கே.சந்திரசேகரராவ், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போதில்லை என அறிவித்தனர். காங்கிரசும் இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தன. இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் திட்டமிட்டபடி மாலை 3 மணி அளவில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் கூடியது.

இதில், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மகாராஷ்டிராவில் பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கட்சி தலைவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பாகவும், அனைத்து கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுதவிர, 2022ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் இந்தாண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் ஆண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘நாடாளுமன்ற செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த யோசனைக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிகள், அமல்படுத்தும் விஷயத்தில் வேறுவிதமான கருத்தை கொண்டுள்ளன. ஆனாலும் அவர்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை. இத்திட்டம் தொடர்பாக பரிந்துரைகள் வழங்க பிரதமர் மோடி குழு ஒன்றை அமைத்துள்ளார்’’ என்றார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மக்கள் வரிப்பணத்தை மிச்சப்படுத்த மக்களவை சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட கமிஷன் பரிந்துரைத்திருந்தது. ஆனாலும், தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தில் இதற்கான சாத்தியமில்லை என்றும் கூறியிருந்தது. ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமெனில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு ஏன்?

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் மக்கள் வரிப்பணம் மிச்சமாகும். அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையை குறைத்துக் கொள்ள முடியும். நேரம் வீணாவது தவிர்க்கப்படும். நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிற பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் நிலை கண்டிப்பாக வராது. தேர்தல் நடத்தை விதியால் புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதிலும், வளர்ச்சிப் பணிகளை தொடங்குவதிலும் தடங்கல் ஏற்படாது என சாதங்கள் கூறப்படுகின்றன.  ஆனாலும், ஒரு மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக் காலத்திற்கு இடையிலேயே ஆட்சி கவிழ்ந்தால் என்னவாகும்? ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? அவ்வாறு ஜனாதிபதி ஆட்சி அமைந்தால் எஞ்சிய ஆண்டுகளுக்கும் முழுமையாக தொடருமா? அப்படி தொடர்ந்தால் மாநிலத்தின் முழு அதிகாரமும் மத்திய அரசிடம் சென்று விடுமே என்பதே எதிர்ப்புக்கு காரணமாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பழிக்கு பழியா?

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு அதிமுகவும், பாஜவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜ மீதான எதிர்பலையால்தான் அதிமுக தோற்றது என அமைச்சர் சி.வி.சண்முகம் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீது அதிருப்தியில் இருந்த பாஜ, கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காமல் திருப்தி அனுப்பி உள்ளது. ஏற்கனவே, ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்தரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தராமல் பாஜ வெளியே தள்ளியது. தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் பாஜ-அதிமுக கூட்டணி விரைவில் உடைய வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவுக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கட்சி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ கலந்து கொள்ள செல்லவில்லை. அதற்கு பதிலாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அவர் நாடாளுமன்றத்திற்கு சென்றபோது திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. கட்சித் தலைவர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்களைத் தவிர வேறெந்த பிரதிநிதிகளுக்கும் அனுமதி கிடையாது எனக் கூறப்பட்டதால் அமைச்சர் சண்முகம் சோகத்துடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தரப்பு அதிகாரிகள் கூறுகையில், “இது நாட்டின் எதிர்க்காலம் குறித்த முக்கிய கூட்டம் என்பதால் கட்சி தலைவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பிதழில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மாநில அமைச்சர்களுக்கோ அல்லது பிரதிநிதிகளுக்கோ இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடையாது’’ என தெரிவித்தனர்.

Tags : Opposition parties ,country ,parties ,meeting ,election ,DMK ,Modi ,Congress , One country, same election advisory meeting, opposition parties, Congress, DMK
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...