×

30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல் : அரசு, தனியார் நிறுவனங்கள் திணறல்

நெல்லை : தமிழகத்தில் ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் இப்படிப்பில் சேர மாணவர்கள் தயங்குகின்றனர். இதனால் இந்த கல்வியாண்டில் 30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்றவர்களுக்கு ஒரு காலத்தில் நல்ல வாய்ப்பு இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் 2 ஆண்டு பயிற்சி பெரும் இக்கல்வியை ஏராளமானோர் போட்டி போட்டு தேர்வு செய்தனர். இந்த கல்வியை முடித்து வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் உள்ளனர். கடந்த 2002ம் ஆண்டுவரை இடைநிலை பட்டய படிப்பை முடித்தவர்கள் 1 முதல் 8ம் வகுப்பிற்கு ஆசிரியர்களாக பணியாற்றினர். அவர்களுக்கு பதவி உயர்வும் கிடைத்தது. 2003ம் ஆண்டிற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டபோது இடைநிலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு குறைந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பட்டய பயிற்சி படிக்க பிளஸ் 2 முடித்தவர்களிடம் ஆர்வம் குறைந்துவிட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும் டிப்ளமோ கல்வி பயில மாணவர்கள் சேரும் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த 2015ல் இயங்கிய 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 2017ல் 279ஆக குறைந்தது. கடந்த ஆண்டும் இதன் எண்ணிகை மேலும் குறைந்தது. அரசு ஓதுக்கீட்டில் சேர்வதற்கு கூட ஆள்தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு கடந்த ஒரு வாரமாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் குறைந்த அளவிலேயே மாணவிகள் வருவதாக அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். வருகிற 24ம் ேததிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட இடங்களில் 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்தால் அந்த கல்வி நிறுவனங்களுக்கான அடுத்த கல்வியாண்டு அங்கீகாரம் தொடர்வது கேள்விக்குறியாகிவிடும். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்தால் மட்டுமே இத்துறையின் கல்வி சேவை தொடர வாய்ப்புள்ளது.

பிரி-பிரைமரி திட்டம் கை கொடுக்குமே


ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் மீண்டும் சிறப்பாக செயல்படவும் மாணவர்களை திரும்பி பார்க்க வைக்கவும் தற்போது நல்ல வாய்ப்பு உள்ளது. அதாவது புதிய கல்விக் கொள்கைப்படி அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பகளை தொடங்க நடப்பு கல்வியாண்டு முதல் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் இந்த வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் எடுக்க செல்ல தயங்குகின்றனர்.

எனவே ஏற்கனவே உள்ள பிரி-பிரைமரி என்ற ஒரு வருட பாடத்திட்டத்தை ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் கற்றுத்தர வேண்டும். பிரிகேஜி முதல் 2ம் வகுப்புவரை 5 வருடம் படிக்கும் மழலையருக்கு பிரி பிரைமரி முடித்தவர்கள் பாடம் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதனால் அரசு தொடங்கிய எல்கேஜி வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்கள் தொடக் நிலையில் கிடைப்பர். இதற்காகவே ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் பிரிபிரைமரி பாடம் படிப்பதற்கான மாணவர்களும் வருகைதர வாய்ப்புள்ளதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Teachers ,Teacher Training Schools ,Government ,Companies , Problem with teacher training schools , less than 30 percent , students attend
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...