×

கோடிக்கணக்கில் குவியும் வருவாய் சிறப்பு நிலை நகராட்சியாக மாறுமா பழநி?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பழநி: கோடிக்கணக்கில் வருவாய் குவிந்து வருவதால், பழநி நகராட்சிக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி 6.63 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. கடந்த 1988ம் ஆண்டு டிச.1ம் தேதி முதல் தேர்வு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நகரின் மக்கள்தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70 ஆயிரத்து 456. பழநி நகரில் உள்ள முருகன் கோயில் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குகிறது. நகருக்கு சாதாரண நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி போன்ற திருவிழா காலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களும் வந்து செல்கின்றனர். பழநி நகரில் வசிக்கும் மக்களுக்கும், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் குடிநீர், பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

2008ம் ஆண்டு ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் உள்ள நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசால் அறிவிப்பு வெளியானது. தற்போது பழநி நகராட்சியில் இயல்புநிலை கணக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவாய் நிதி, குடிநீர் மற்றும் கல்வி நிதி என 3 நிதிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சியின் பல்வேறு இனங்கள் மற்றும் வரி வசூலிப்புகளின் மூலம் 201-11ம் நிதியாண்டில் ரூ.13.32 கோடியும், 2011-12ம் நிதியாண்டில் 13.54 கோடியும், 2012-13ம் நிதியாண்டில் ரூ.15.98 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. தொடர்ந்து நகராட்சி வருவாய் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, பழநி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் நகராட்சி தலைவர் வேலுமணி கூறுகையில், ‘‘பழநி நகருக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து கிடைத்தால் கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

அதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தலாம். இதற்காக பழநி நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது. பழநி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் திமுகவிற்கு செல்வாக்கு அதிகம். சட்டமன்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாரே வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இதனால் திமுக எம்எல்ஏ உள்ள கால கட்டத்தில் பழநி நகருக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடக்கூடாதென அதிமுகவினர் கருதுகின்றனர். இதனால் பழநி நகராட்சிக்கான சிறப்புநிலை அந்தஸ்து கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Millions ,municipality , Revenue Specialties, Municipalities, Antiquities
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...