ஹெல்மெட் அணியாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : ஈரோட்டில் போலீஸ் கெடுபிடியால் வழிக்கு வரும் வாகன ஓட்டிகள்

ஈரோடு : ஈரோட்டில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது வழக்கு மட்டுமல்லாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர பகுதிகளான கலெக்டர் அலுவலகம் முதல் பன்னீர்செல்வம் பார்க் வரையிலான சாலை, மேட்டூர் சாலை என குறிப்பிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதேபோல புறநகர் பகுதிகளான பவானி, கோபி, பெருந்துறை, சத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்ட சாலைகளில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் நாளான நேற்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 500க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து எஸ்.பி. சக்திகணேசன் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் என இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகின்றது. தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். இதேபோல ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு பூங்கொத்து கொடுப்பது, சாக்லெட் கொடுப்பது என ஊக்கப்படுத்தி வருகின்றோம். புதியதாக இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு வாகனம் வாங்கும்போதே சம்பந்தப்பட்ட டீலர்கள் ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

முதல்நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் ஏற்கனவே போலீஸ் அறிவித்துள்ள சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மாநகர பகுதிகளில் திருப்பி அனுப்பி வைப்பது என்பது சாத்தியமில்லை என்பதால் புறநகர் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 சதவீத வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வைத்துள்ளனர். ஆனால் அதை அணியாமல் அலட்சியமாக உள்ளதோடு அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளனர். எனவே ஒருபுறம் வழக்குப்பதிவும், மற்றொரு புறம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு சக்திகணேசன் கூறினார்.

போலீஸ் மீதும் வழக்கு பாயும்

இருசக்கர வாகனங்களில் செல்லும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கினால் சம்மந்தப்பட்ட ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எஸ்.பி. சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.Tags : motorists ,police car crash ,Erode , Helmet ,unregistered persons, sent back
× RELATED சீட்பெல்ட், ஹெல்மெட் அணிந்து...