×

சேலத்தில் ஒரே நிறுவனத்தின் 5 திரையரங்குகளுக்கு சீல்: கேளிக்கை வரியை செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கேளிக்கை வரியை செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் வளாகத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 5 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. ஒரே வளாகத்தில் 5 திரையரங்குகளை வைத்துள்ள நிர்வாகம், கடந்த ஒரு வருட காலமாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியை செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுவாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் திரையரங்குகள் வசூலிக்கும் தொகையில் 30% கேளிக்கை வரியாக மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செலுத்தாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான திரையங்குகள் 1 வருடமாக வரியை செலுத்தவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அந்நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. மேலும் சுமார் 30 லட்சம் அளவிற்கு கேளிக்கை வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இந்த திரையரங்குகள் சேலம் மாநகரில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் சீல் வைப்பதற்கு முன்னதாக திரையரங்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது திரையரங்கு நிர்வாகம் கூறியதாவது, கேளிக்கை வரி தொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை மறுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆதாரங்களை காண்பித்து திரையரங்குகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

Tags : theaters ,company ,Salem , Salem, Theaters, Seal, Entertainment Tax
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...