×

பரமக்குடி வைகையாற்றில் மணல் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பரமக்குடி: அதிகாரிகளின் அலட்சியத்தால் பரமக்குடி வைகையாற்றில் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி வைகை ஆறு பரமக்குடி நகர் மட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தாகத்தை தீர்க்கும் புன்னிய ஆறாக உள்ளது. இந்த ஆற்றில் பரமக்குடி நகர் பகுதிகளான மணிநகர் முதல் காக்காதோப்பு வரையில் மட்டுமே மணல் காணப்படுகிறது. மற்ற இடங்களில் அரசின் மூலம் விடப்பட்ட மணல் குவாரிகள் மணலை அள்ளிவிட்டு, வெறும் கட்டாந்தரையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பொதுநல வழக்கில் நீதிமன்றம் மணல் அள்ளுவதை முற்றிலும் தடை செய்ததால், மணல் அள்ளுவதை அதிகாரிகள் தடைசெய்து வருகின்றனர். ஆனால் வருவாய்த்துறையில் அடிமட்டத்தில் உள்ள தலையாரி மற்றும் கிராம அலுவலர்களை கையில் வைத்து கொண்டு எமனேஸ்வரம், கமுதக்குடி, பெருமச்சேரி, வளையனேந்தல், மணிநகர், பார்த்திபனூர், சூடியூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டு நடந்துகொண்டு இருகிறது.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கும்பட்சத்தில் சம்பந்தபட்ட மணல் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து தப்பிக்க வைக்கும் சூழ்நிலை உள்ளது. மணல் கொள்ளையர்கள் நூதன முறையில் பகல் நேரங்களில் சாக்குமூட்டைகளில் மணலை அள்ளிவைத்துவிட்டு இரவு 2 மணிக்கு மேல் காவலர்கள் ரோந்து பணியினை முடிக்கும் நேரம்பார்த்து, டூவீலரில் மணல் மூடைகளை கொண்டு சென்று வீடு கட்டுபவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். 10 கிலோ எடையுள்ள மணல் மூட்டை ரூ.50க்கு விற்பனை செய்வதால் தினமும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். மீறி மணல் திருடர்களை வருவாயத்துறையினர் பிடித்து கொடுத்தால், அவர்கள் மீது வழக்கு தொடர காவல்துறை தயங்குகிறது. இதனால் மணல் கொள்ளை அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் எமனேஸ்வரம், காட்டுபரமக்குடி, மணிநகர், கமுதக்குடி, மஞ்சூர் பகுதிகளில் மணல் திருட்டு நடந்து வருவதாக தகவல் கிடைக்கும். அதன்படி சென்று பார்த்தால் தப்பித்து விடுவார்கள். அள்ளிய மணல் மூட்டைகள் மட்டும் இருக்கும். சில நேரங்களில் காவல் நிலையத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டர்களின் தகவல் தெரிந்து புகார் கொடுத்தாலும், அதை வாங்கி வழக்கு தொடராமல் விட்டுவிடுகின்றனர். இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் திருட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

Tags : Paramakudi Vaigaiyadar , Paramakudi, Vaigai
× RELATED யானை தாக்கி விவசாயி பலி