×

வேலூர் கோட்டை அகழியை தூர்வார 2வது நாளாக படகு மூலம் அகழியின் ஆழம் ஆய்வு

வேலூர்: வேலூர் கோட்டை அகழியை தூர்வாருவதற்கான பணியில் நேற்று 2வது நாளாக படகு மூலம் அகழியின் ஆழத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நவீன இயந்திரங்களுடன் விரைவில் தூர்வாரும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரூ.33 கோடி மதிப்பீட்டில் வேலூர் கோட்டையை அழகுபடுத்தும் பணிகளும் இத்திட்டத்தில் உள்ளது. வேலூர் கோட்டை அகழியை தூர்வாருவது, இரவு நேரங்களிலும் ஒளிரும் வகையில் மின்விளக்குகள் அமைப்பது. கேன்டீன் வசதி, பூங்கா, தொன்மை வாய்ந்த கட்டிடங்களை புனரமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல் வேலூர் கோட்டை அகழி முழுவதுமாக 1 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு சுற்றிலும் நீர் இருக்கும் வகையில் அதற்கான நீராதாரங்களை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்வதற்காக மத்திய தொல்லியல்துறையின் தொல்லியலாளர் ரமேஷ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கோட்டை அகழியை முழுமையாக ஆய்வு செய்யும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கினர்.நேற்று 2வது நாளாக தொல்லியல்துறை அதிகாரிகள் அகழியில் படகு மூலம் சுற்றி வந்து, அகழியின் ஆழத்தை நவீன கருவி மூலமாக அளவீடு செய்தனர். 2 நாட்களில் அகழியை ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்துவிடும். பின்னர் அகழியை தூர்வாருவதற்கு நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore Fort Trench , Vellore, trench
× RELATED தூர்வாரும் பணிகள் நிறைவடைந்ததும்...