மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்

திருவாரூர்: காவிரி டெல்டா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்தும் வேதாந்த நிறுவனத்தை கண்டித்தும் மன்னார்குடியில் 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் கடந்த 1 மாதங்களாக பல்வேறு இடங்களில் பலகட்ட போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வயல்வெளியில் இறங்கி போராட்டம், உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாய சங்கத்தினரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கர்ணாவூர் கிராமத்தில் இருக்க கூடிய விவசாயிகள் நூதன முறையில் அதாவது வயலில் இறங்கி தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களும் பொதுமக்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் இந்த கர்ணாவூர் பகுதி என்பது பொதுவாக விவசாயம் செய்ய கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அதாவது டெல்டா பகுதி உள்ளது. மேலும் இந்த பகுதியானது நஞ்சை செய்ய கூடிய பகுதியாகும். இதையடுத்து இந்த இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாமல் உரிய நேரத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கினால், கிட்டத்தட்ட 3000 அடியில் இருந்து 6000 அடி வரை போர் குழாய்கள் அமைக்கப்பட்டால் தண்ணீர் கடுமையாக பாதிக்கப்பட்டு மனிதர்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்பதால் உடனடியாக மத்திய அரசும் மாநில அரசும் இந்த திட்டத்தினை கைவிட வேண்டும் என்றும் அவ்வாறு மத்திய அரசும் மாநில அரசும் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Mannargudi , Thiruvarur, Mannargudi, Hydro-carbon project, Farmers, Modernization, Struggle
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்