×

ஏற்காட்டில் கற்கோபுரம், காட்சி முனை உள்ளிட்ட 6000ம் ஆண்டுகள் பழமையான கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு

ஏற்காடு: ஏற்காடு மலை பகோடா பயின்ட் மற்றும் கொட்டச்சேடு கிராமத்தில் புதிய கற்காலத்தை சேர்ந்த கற்கோபுரம் மற்றும் கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிலுள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகா பகோடா பாயின்ட் காட்சி முனை உள்ளது. அங்கு சதுர வடிவில் வெட்டிய கற்களால் பகோடா கோபுரங்கள் போல கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். இதுபோல் கற்கோபுரம், கொட்டச்சேடு கிராமத்தில் இருப்பதை ஏற்காடு வரலாறு குறித்து ஆய்வுசெய்து வரும் இளங்கோ, தேவராஜ் மற்றும் பொன்னையன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வரலாறு ஆய்வாளர் இளங்கோ கூறியதாவது: “ஏற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டச்சேடு கிராமத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில் புதிய கற்கால கருவிகள், கற்கோபுரம், அதிசய பாறை கீறல்கள், பாறையில் மாட்டின் காலடி, காட்சி முனை உள்ளிட்டவை இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.

கொட்டச்சேடு பெருமாள் கோயிலில் கல்கூடம், கற்திட்டைகள் உள்ளன. கல் கூடத்தின் உள் புதிய கற்காலத்தை சேர்ந்த கைக்கோடாரிகள் 35 உள்ளன. இவற்றை சாமிக்கல் எனக்கூறி, கிராம மக்கள் வழிபடுகின்றனர். இந்த கருவிகள், சுமார் 6000ம் ஆண்டுகள் பழமையானவை. அதுபோல், இக்கோயிலின் மேற்பகுதியில் உள்ள சிறு குன்றின் மீது ஒரு கற்கோபுரம் காணப்படுகிறது. இந்த கற்கோபுரம் பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. கற்கோபுரத்தின் அடிப்பகுதி அகலமாகவும், மேலே செல்ல செல்ல குறுகியுள்ளது. பார்ப்பதற்கு பிரமிடு போல காட்சியளிக்கிறது. 8 அடி உயரமும், அடிப்பகுதி 8 அடி அகலமும் உள்ளது. அதுபோல் ஒரு பாறை கல்லில் பல்வேறு கோடுகள் உள்ளன. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், பல சதுரங்கள், பல செவ்வகங்கள், முக்கோணங்கள் அதில் வரையப்பட்டு உள்ளன. மிக துல்லியமான அளவில் செவ்வக கட்டங்கள் உள்ளன. பல கோடுகள் மிகவும் ஆழமாக உள்ளன. இவை இயற்கையாக உருவானவை. இவ்வாறு உருவாவது புவியியல் இணைப்பு எனப்படும்.

மேலும் இங்குள்ள பாறையில் மாட்டின் காலடிகள் போன்று தத்ரூபமாக 2 அச்சுகள் உள்ளன. இவை இயற்கையாக உருவானவை. காற்று, மழை போன்ற இயற்கை நிகழ்வுகளால், பாறையின் மென்மையான பகுதி அரிக்கப்பட்டு, இதுபோன்ற அச்சுகள் உருவாகியுள்ளன. இப்படி உருவாவதை பெட்ரோசோம டோக்சிஃப் என்பர். காட்சி முனை என்ற இடம் செங்குத்துப் பாறையால் ஆனது. இந்த இடம் ஆங்கிலேயர் காலத்தில் காட்சி முனையாக இருந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 200 அடி உயரம் வரை பாறையாக உள்ளது. அங்கிருந்து மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்கலாம். மேலும் அங்கிருந்து வாழவந்தி, பிலியூர், கூத்துமுத்தல், கொம்புதூக்கி, வனத்துறையின் தேக்கு காடுகள், மூங்கில் காடுகள் பசுமையான பள்ளத்தாக்கு உள்ளிட்டவற்றை காணலாம். மேலும் சேலத்தில் உள்ள வலசையூர் கிராமத்தையும் காண முடியும். எனவே, தமிழக அரசு சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறையின் மூலம் இந்த இடத்தை மேம்படுத்தி, சுற்றுலா தலமாக உருவாக்கினால், சுற்றுலா பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தாக அமையும். மேலும் கற்கால கருவிகள் மற்றும் கற்கோபுரம் குறித்து தொல்லியல் துறையினர், இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டால், மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Yercaud , Yercaud, modern tools
× RELATED ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு