×

சேலம் மாவட்டத்தில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் 550 ஏரிகள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடும் வறட்சியின் காரணமாக 550 ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு, காய்ந்துபோய் கிடக்கிறது. 3 ஏரிகளில் மட்டும் திருமணிமுத்தாற்றில் இருந்து செல்லும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தமிழகம் முழுவதும் நடப்பாண்டு போதிய மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவுகிறது. ஏரி, குளங்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. காவிரி உள்பட முக்கிய ஆறுகளிலும் தண்ணீர் வரத்து இல்லை. இதனால், குடிநீருக்கு மக்கள் கடும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரங்களை போலவே கிராமங்களிலும் குடிநீர் கேட்டு சாலைமறியல் செய்யும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும், விவசாய பணிக்காகவும் 553 ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 103 ஏரிகளும், ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் 450 ஏரிகளும் இருக்கின்றன. இந்த ஏரிகளில் 10 சதவீத குளம், குட்டையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். கோடை காலமான ஏப்ரல், மே மாதத்தில் கூட பாதியளவாது நீர் இருப்பு இருந்திருக்கும். ஆனால், நடப்பாண்டு அப்படியே தலைகீழாக வெறுமனே 3 ஏரிகளில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. அதுவும் திருமணிமுத்தாற்றில் செல்லும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

சேலத்தை அடுத்துள்ள பைரோஜி ஏரி, வீரபாண்டி ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி ஆகிய மூன்றில் மட்டும் கழிவுநீர் தேங்கி, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாமக்கல் நோக்கி செல்லும் திருமணிமுத்தாற்றில் சேலம் மாநகர பகுதியில் வெளியேறும் கழிவுநீர் செல்கிறது. அது தான், அந்த ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. மற்றபடி மாவட்டத்தில் 550 ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. இந்த ஏரிகள் அனைத்தும் பாறைகளாகவும், கரடு மண்ணாகவும் காட்சியளிக்கின்றன. வரும் தென்மேற்கு பருவழை ஓரளவுக்கு கைகொடுத்தால் மட்டுமே இந்த ஏரிகள் நிரம்பும். அந்த அளவிற்கு கடும் வறட்சியை ஏரிகள் சந்தித்துள்ளது. ஏரி, குளம், குட்டை என அனைத்தும் வறண்ட காரணத்தால், விவசாய பணிகளும் அடியோடு முடங்கியுள்ளது. கிணற்று பாசன விவசாயத்தை மட்டும் தோட்டங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் செய்து வருகின்றனர். அவர்களும் மரவள்ளி மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக தொடர் வறட்சியை சந்தித்து வருகிறது. நடப்பாண்டும், சரிவர மழை பெய்யாததால், ஏரிகள் அனைத்தும் வறண்டுள்ளது. வரும் பருவமழையை எதிர்நோக்கியுள்ளோம். சரியாக மழை பெய்தால், ஏற்காடு மலையை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் சுமார் 100 ஏரி, குளங்கள் முதலில் நிரம்பும். அதேபோல், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர் பகுதியிலும் ஏரிகள் நிரம்பிவிடும்,’’ என்றனர்.

Tags : lakes ,district ,Salem , Lakes, drought
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...