×

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிச்சநல்லூர் பறம்பில் ரூ.2 கோடியில் இரும்புவேலி அமைக்கும் பணி மந்தம்

செய்துங்கநல்லூர்: 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆதிச்சநல்லூர் பறம்பில் ரூ.2 கோடியில் இரும்பு வேலி அமைக்கும் பணி பாதி முடிந்த நிலையில் மந்தமடைந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக பணிகள் ஏதும் நடக்காததால் அகழாய்வு ஆர்வலர்கள் வேதனையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அகழாய்வு ஆர்வலர்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மிகவும் பழமையான பெரிய அளவிலான இடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகள் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானவை என புளோரிடா ஆய்வகம் உறுதி செய்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூர் பறம்பில் அதாவது 114 ஏக்கர் நிலத்தைச் சுற்றி ரூ.2 கோடியில் இரும்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் பாதி பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் கடந்த இரு மாதமாக இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த பொன் ரவி கூறுகையில், ‘‘ஆதிச்சநல்லூரை பாதுகாக்க திட்டமிட்ட தொல்லியல் துறையினர், பறம்பில் 114 ஏக்கர் நிலத்தைச் சுற்றி இரும்புவேலி அமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தனர். மந்தகதியில் மேற்கொள்ளப்பட்ட இப்பணி 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்த வழக்கில் பணிகள் நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் கடந்த 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இதுவிஷயத்தில் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்’’ என்றார்.

இதே கருத்தை வலியுறுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள், ஏற்கனவே இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் நம்நாட்டிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்; தொன்மையான நாகரீகம் ஆதிச்சநல்லூர் நாகரீகம் என தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மந்தகதியில் இரும்புவேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவது வேதனையளிக்கிறது. எனவே, இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என்றனர்.

Tags : Irumbuveli ,Adichchanallur Parambil , Iron fence
× RELATED முதுமக்கள் தாழிகள் சேதம்...