×

ஆய்வு செய்து கலெக்டர் அறிவித்த பின்னரும் திருவானைக்காவல் புதிய மேம்பாலம் திறப்பு விழா ரத்து

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் மேம்பாலம் இன்று திறக்கப்படும் என ஆய்வு செய்து கலெக்டர் அறிவித்த நிலையில், திறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாலத்தை திறக்க இத்தனை இழுபறியா என பொதுமக்கள் ஆவேசமடைந்துள்ளனர். ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலம் மிகவும் குறுகலாக இருந்ததால் அப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி கடந்த 1.10.2016ல் துவங்கப்பட்டது. திருவானைக்காவல் மக்கள் வசதிக்காக சப்வே (சுரங்கப்பாதை) அமைக்கப்பட்டது. 907.760 மீட்டர் நீளத்தில், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. 48 தூண்கள் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் சென்னை-திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும், கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கரம், திருச்சி கரம், கல்லணை கரம் ஆகிய மூன்று கரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கல்லணை என மூன்று பக்க அணுகுசாலை அமைக்கும் பணிகள் இன்னும் முற்றுபெறவில்லை. மேம்பாலத்தில் மின் விளக்கு அமைத்து, வர்ணம் பூசி, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்கும் பணிகள் ஓரளவு முடிந்துவிட்டது.

கடந்த 13ம் தேதி திருச்சி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பாலத்தை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அணுகுசாலை பணிகள் முடிவடையாததால் விழா நடக்கவில்லை. தொடர்ந்து 17ம் தேதி பாலம் திறப்பு விழா நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதுவும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி கலெக்டர் சிவராசு, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேற்று பாலம் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், ‘பாலம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நாளை (இன்று) பாலத்தை திறந்து வைக்க உள்ளார்’ என தெரிவித்தார்.

ஆனால், பாலம் திறப்பு விழா நாளை (இன்று) ரத்து செய்யப்பட்டுள்ளதாக திடீரென மாவட்ட நிர்வாகத்திலிருந்து அனைத்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருவானைக்காவல் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். ஒரு பாலத்தை திறக்க இத்தனை இழுபறியா?, பாலம் திறப்பு விழா எப்போது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளட்டும், குறைந்தபட்சம் அவ்வழியாக மக்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும் என திருவானைக்காவல் மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் பாலம் திறக்கப்படாத தகவலறிந்த வாகனஓட்டிகள் நேற்றிரவே அதை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : opening ,bridge ,Thiruvanaikaval ,Collector ,inspection , Trichy, Thiruvanaikaval, Highway
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு