×

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ யோசனை குறித்த ஆலோசனைக் கூட்டம் : ஸ்டாலின், மம்தா, சரத்பவார் புறக்கணிப்பு

புதுடெல்லி:  ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற யோசனையை முன்னிறுத்தி பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.  

 ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ யோசனை குறித்த ஆலோசனைக் கூட்டம்

மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மாறி, மாறி வருவதால் ஆண்டுதோறும் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், தேர்தல் செலவும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை நடத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்காக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து விவாதிக்க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினரை கொண்டுள்ள கட்சியின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ளது. இதில், 2022ம் ஆண்டு நாட்டின் 75 சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் 150ம் ஆண்டு விழா ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

இந்நிலையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற யோசனையை முன்னிறுத்தி பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் யோசனையை எதிர்க்கும் இடது சாரிகள் கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதா இல்லையா என்பதை காலையில் கூடி முடிவு செய்யப் போவதாக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனிடையே சிவசேனா உதயமானதன் 53வது ஆண்டு கொண்டாட்டங்கள்  திட்டமிடப்பட்டு இருப்பதால், அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு பதிலாக அவரது மகன் கே.டி. ராமராவ் பங்கேற்கிறார்.

அனைத்து எம்பிக்களுக்கும் பிரதமர் மோடி விருந்து


இந்நிலையில் அனைத்து எம்பிக்களுக்கும் பிரதமர் மோடி நாளை இரவு விருந்து அளிக்க உள்ளார். டெல்லியில் உள்ள அசோகா ஒட்டலில் இரவு விருந்தில் பங்கேற்க நரேந்திர மோடி அனைத்து கட்சி எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கூடியது. முதல் நாளில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் புதிய எம்பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாநில எம்பி.க்கள் அவர்களின் தாய்மொழியிலும், விருப்ப மொழியிலும் பதவியேற்றனர். 2ம் நாளான நேற்று தமிழக எம்பிக்கள் 38 எம்பிக்களும் புதுச்சேரி எம்பியும் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். அத்துடன் புதிய எம்பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்றுடன் முடிந்தது. எனவே புதிய எம்பிக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நாளை விருந்தளிக்க உள்ளார். 


Tags : country ,Stalin ,Mamta ,Sarath Pawar , One Country Only One Election, Consultation, Lok Sabha, Prime Minister Modi, Stalin, Mamta, Sharad Pawar
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...