×

சென்னையில் விசாரிக்கப்பட்டு வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் அந்தந்த மாவட்டங்களுக்கு மாற்றம்: சிபிஐ, போக்சோ, பெரா வழக்குகளும் இணைக்கப்படுகிறது

சென்னை: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான குற்றவழக்குகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிமன்றங்களே விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவழக்குகளை தவிர்த்து சிபிஐ, போக்சோ, பெரா, வழக்குகளையும் விசாரிக்க முடிவு செய்யப்படுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் கூறியது. இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலன் மாளிகையில், எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது. அதற்கு நீதிபதியாக சாந்தி நியமிக்கப்பட்டார்.

இதனைதொடர்ந்து தமிழக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது பிற மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வந்த 78கும் மேற்பட்ட குற்றவழக்குகள் அனைத்தும் சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் விசாரணைகளும் தொடங்கப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது பிற மாவட்டங்களில் இருக்கும் சாட்சிகள், போலீஸ் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னைக்கு வந்து ஆஜராகி சாட்சியம் அளித்துவிட்டு சென்று வந்தனர். இந்த நீதிமன்றம் தொடங்கும் போது சற்று பரபரப்பு இல்லாமல், அமைதியாக காணப்பட்டது.  இந்தநிலையில் தான் வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டு, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. முதல் தீர்ப்பே 10 ஆண்டு சிறை தண்டனை என்றதும், அரசியலிலும், நீதித்துறையிலும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஓசூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாகமும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி கடந்த 1998ம் ஆண்டு  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அரசு பேருந்து, போலீஸ் ஜீப்பை எரித்து, பொது சொத்துகளை சேதப்படுத்தியாக பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த வழக்கு விசாரணையை முடித்து, நீதிபதி ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்க தேதி குறித்தார்.  பாலகிருஷ்ணா ரெட்டியோ இந்த வழக்கில் 78வது குற்றவாளிதானே என்று சர்வசாதாரணமாக அமைச்சராக வந்திருந்தார். ஆனால், நீதிபதி பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய சில மணி நேரங்களிலேயே அவரது எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாரும் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வாக அமைந்திருந்தது. இதனைதொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் அனைத்து வழக்குகளும் சற்று உற்று நோக்க வைத்தது. இந்தநிலையில், நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளும் 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளதால், சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் பிற மாவட்ட எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான குற்ற வழக்குகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதிகளே விசாரிக்கலாம்.  என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்த 78 வழக்குகளில் வெளிமாவட்ட வழக்குகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகிறது. மேலும் சென்னை சம்பந்தப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை மட்டும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 30 குற்றவழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற சட்ட வழக்குகள் வந்ததும், அதிகரிக்கும் என்று தெரியவருகிறது.

இதேபோல் இதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான(ஐபிசி) குற்றவழக்குகள் மற்றுமே விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் சிபிஐ, போக்சோ, சிசிபி, எஸ்.சி, எஸ்.டி, பெரா போன்ற சட்டங்களின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சென்னையில் கூடுதலாக மேலும் 2 நீதிமன்றங்களும், மாவட்டங்களில் முதன்மை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முதன்மை மாஜிஸ்திரேட்கள் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை(மக்களவை தேர்தலுக்கு முன்) 321 எம்.பி, எம்.எல்.ஏகள் மீது வழக்குகள் உள்ளது. ஏற்கனவே பல வருடங்களாக மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்ததால் தான் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்குகள் மாற்றப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது டிடிவி தினகரன், வைகோ மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்படத்தக்கது.

முதல் தீர்ப்பே 10 ஆண்டு சிறை
இந்த சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டு முதல் தீர்ப்பே, பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் சிறுமியை கொலை செய்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

பாலகிருஷ்ணா ரெட்டி பதவி போச்சு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பொதுசொத்துக்களை 1998-ல் சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு, பதவியை இழந்தார்.

எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகள்
உ.பி    992
ஒரிசா    331
தமிழ்நாடு    321



Tags : MPs ,Chennai ,CPI ,districts ,PERA , Chennai, MP, MLA, CBI, Bokso, Pera cases
× RELATED வடமாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை;...