லாரிகளில் தண்ணீர் நிரப்பும் அதிமுகவினர் பிடியில் நீரேற்றும் நிலையங்கள்: நிர்வாகிகள், கட்சியினருக்கு முன்னுரிமை,.. பொதுமக்களுக்கு இல்லை

சென்னை : லாரிகளில் நீர் நிரப்பும் நீரேற்று நிலையங்களை அதிமுகவினர் தங்கள் கன்ட்ரோலில் வைத்துள்ளதால், அவர்கள் சொல்லும் பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.  சென்னையில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் லாரிகள் அனைத்தும் அதிமுகவினர் பிடியில் சென்று கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.  வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், எம்ஆர்சி நகர், சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் விடுதி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையங்கள் அதிமுக நிர்வாகிகள் கன்ட்ரோலுக்கு சென்று கொண்டிருப்பது பொதுமக்களின் தவிப்பை அதிகமாக்கியுள்ளது. அங்குள்ள குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் லாரி டிரைவர்களை அதிமுகவினர் சொல்லும்   பகுதிகளுக்கு திருப்பி விடுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆன் லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வழங்கப்படும் சூழ்நிலையில், அந்த பதிவுகளை மாற்றி அதிமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குமாறு நீரேற்று நிலையங்களில் அதிகாரம் செலுத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.ஆளுங்கட்சி என்பதால் நீரேற்று நிலையங்களில் உள்ள குடிநீர் வாரிய அதிகாரிகளும் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்லும் பகுதிகளுக்கு லாரிகளை திருப்பி விடுகின்றனர். இதனால் முறைப்படி வர வேண்டி பகுதிகளுக்கு லாரி தண்ணீர் செல்லாமல் மக்கள் எப்போது லாரி தண்ணீர் வரும் என்று குடங்களுடன் நாள்கணக்கில் காத்து கிடக்கின்றனர். குறிப்பாக எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் ஆளுங்கட்சியினரின் அராஜகம் எல்லை மீறி செல்வதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய லாரி தண்ணீரை தங்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்க சொல்வதாக எழுந்துள்ள புகார் சென்னை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு தீர்வு ஏற்படுத்தாவிட்டால் தண்ணீருக்காக தவிப்புடன் இருக்கும் பொதுமக்களின் போராட்டத்தை ஆளுங்கட்சி சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களின் ஓங்கிய குரலாக
உள்ளது.

Tags : Water pumping stations ,party ,executives , Water, AIADMK, executives, party, public
× RELATED பழைய நடைமுறைப்படி ஆர்டிஓ...