×

மக்கள், கல்வியாளர்கள் கருத்து கேட்கும் வரை பிளஸ் 2 வகுப்பில் 6 பாடங்கள் நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: பிளஸ் 2 வகுப்பில் தற்போது உள்ளபடி 6 பாடங்கள் என்ற நடைமுறை தொடர்ந்து நீடிக்கும். மாணவர்கள் விருப்பப்பட்ட பாடங்களை  தேர்வு செய்யும் முறை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்ட பிறகே நடைமுறைப்படுத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் நான்கு பாடங்கள் என மொத்தம் 6 பாடங்கள் என்பது பிளஸ் 2 வகுப்பில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறிந்து 6 பாடங்கள் நடைமுறையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடச் சுமையை குறைக்கும் வகையில், ‘ஆப்ஷன்’ என்னும் ‘விருப்ப பாடம் தேர்வு’  என்ற அடிப்படையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான கோப்பு முதல்வரிடம் சென்றுள்ளது. ஆனால் மொழிப்பாடங்கள் அப்படியே  இருக்கும். இந்த ஆண்டு 2,3,4,5,7,8,10 பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. எதிர்கட்சித்  தலைவர் 3, 4ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். எல்லா புத்தகங்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளன. அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாலையே சென்று சேரும். கடந்த ஆண்டு  1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டது.

மீதம் உள்ள வகுப்புகளான 4 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்களை மாற்றி இருக்க வேண்டும். ஆனால், முதல்வரின் உத்தரவுப்படி 8 வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  மக்கள், கல்வியாளர்கள் கருத்து அறியப்பட்ட பிறகு தான் 6 பாடங்கள் என்பதில் மாற்றம் கொண்டு வரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை 6 பாடங்கள் தொடரும். தொழில் சார்ந்த பாடங்கள் பிளஸ் 2 வகுப்பில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம், ஓட்டல் நிர்வாகம், சுற்றுலா நிர்வாகம், ஜவுளி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.

பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த முன் அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும். மத்திய அரசு புதிய  கல்விக் கொள்கை கொண்டு வந்துள்ளது. அது குறித்து  முதல்வருடன் பேசி வருகிறோம். அதற்கான தீர்வு முதல்வர் எடுப்பார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடுபடி குழந்தைகள் சேர்க்க வேண்டும் என்ற நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும்.

அரசு பள்ளியில் குடிநீர் பஞ்சம் பற்றி புகார் இல்லை
கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மேலும் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் எந்த இடத்திலும் தண்ணீர் இல்லை என்ற  புகார் வரவில்லை. செங்கல்பட்டு கழிவறை பூட்டப்பட்டதாக இன்று செய்தி  வெளியாகியுள்ளது. அப்படி அல்ல. பள்ளிகள் பூட்டும் போது கழிவறைகள்  பூட்டுவதும், காலையில் 8.30 மணிக்குமேல் திறப்பதும் வழக்கம். அப்படித்தான்  அது பூட்டப்பட்டு இருந்தது. எந்த இடத்திலும் எந்த பள்ளியிலும் குடிநீர்  தட்டுப்பாடு இல்லை. அரசைப் பொருத்தவரை பள்ளிகள் ஏதும் தண்ணீர் பிரச்னையால்  மூடப்படவில்லை. அப்படி ஏதாவது காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் அடுத்த குப்பம் பகுதியில் குடிநீர் பிரச்னை குறித்து சாலை மறியல் என்று தகவல் வந்துள்ளது.இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



Tags : Chengottai ,Plus Two ,educators , People, Educators, Plus 2, Minister Senkottaiyan
× RELATED ஜேஇஇ தேர்வு எழுதிய அரசு பள்ளி...