×

சென்னை பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு கட்டாயம்: முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.   சென்னை மாவட்டத்தில் இயங்கும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தலைமை ஆசிரியர்களிடையே பேசும் போது, இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. அதனால், சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளும் இந்த வார இறுதிக்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க  வேண்டும்.

மழை பெய்யும் போது மொத்த நீரும் அந்த சேமிப்பு தொட்டியில் சேரும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதன் பயன்களை மாணவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். சென்னை மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு இனிவரும் காலங்களில் நிலத்தடி நீரை  பாதுகாக்கும் முயற்சியில் இறங்காவிட்டால் நம் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.  மழை பெய்யும் போது கிடைக்கும் நீரை சரியாக சேமிக்காமல், கடலில் கலக்க விட்டதால் ஏற்பட்ட இந்த அவல நிலையை மழைநீர் சேமிப்பின் மூலம்தான் சரிசெய்ய முடியும் என்பதையும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதனால், ஏற்கனவே தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் இருந்தால் அவற்றை தூர்வாரி சரியாக பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக போட்டோவுடன் கூடிய ஆவணத்தை ஒவ்வொரு பள்ளியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.



Tags : schools ,Chennai , Madras Schools, Rain Water Storage, Primary Education Officer
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...