×

எண்ணூரில் குடிபோதையில் பயங்கர மோதல் ரவுடி மீது சரமாரி துப்பாக்கி சூடு: ஊட்டியில் பதுங்கிய மற்றொரு ரவுடி கைது.. சென்னையில் துப்பாக்கி தாராளமாக கிடைப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: எண்ணூரில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது. இதில் ஒரு ரவுடி படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில் ஊட்டியில் பதுங்கியிருந்த மற்றொரு ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 25 வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரமேஷ், சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதன்பிறகு கடந்த 7ம் தேதி இரவு ரமேஷ், அதே பகுதியை சேர்ந்த தனது கூட்டாளி அலெக்சாண்டர் (30), செந்தில்குமார் (25) மற்றும் சிலருடன் அன்னை சிவகாமி நகர் பகுதியில் மது அருந்தியுள்ளார்.

அப்போது அலெக்சாண்டருக்கும், செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அலெக்சாண்டருக்கு ஆதரவாக ரமேஷ் தனது கைத்துப்பாக்கியை எடுத்து செந்தில்குமாரை நோக்கி சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் செந்தில்குமாருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் விழுந்து துடித்துள்ளார். இதையடுத்து அலெக்சாண்டர் மற்றும் ரமேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அப்போது அவர்கள், ‘துப்பாக்கி சூடு குறித்து போலீசாரிடம் தெரிவித்தால் உன்னை கொலை செய்துவிடுவோம். நேராக உன் வீட்டுக்கு சென்றுவிடு’ என்று செந்தில்குமாரை மிரட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதன்பிறகு ரத்தவெள்ளத்தில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்த செந்தில்குமார், தனது காயத்துக்கு மருந்து வைத்துக்கொண்டு ஓய்வெடுத்துள்ளார்.

மேலும், அந்த காயம் பெரிய புண்ணாக மாறி வலி எடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பயந்துபோன செந்தில்குமார் நேற்று முன்தினம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை ஸ்கேன் செய்த டாக்டர்கள் துப்பாக்கி குண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து எண்ணூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி அங்கு சென்று அவரிடம் விசாரித்தார். அதில் நடந்த விபரங்களை செந்தில்குமார் போலீசிடம் கூறினார். இதுபற்றிய புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அலெக்சாண்டர் மற்றும் ரமேஷ் ஆகியோரை தேடினர்.

அவர்களை பற்றி விசாரித்தபோது அலெக்சாண்டர் ஊட்டியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதன்படி போலீசார் ஊட்டிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த அலெக்சாண்டரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருவொற்றியூருக்கு கொண்டுவந்தனர். இதில் தொடர்புடைய ரமேஷ் என்பவரும் பின்னர் கைது செய்தனர். ரவுடிகள் இடையே நடந்த சண்டையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ரவுடி காயம் அடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் ரவுடிகளிடம் சர்வசாதாரணமாக துப்பாக்கிகள் நடமாடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ரவுடிகளுக்குள் முன்விரோதம்
எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடியான காளி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான தனசேகருக்கும் கடந்த 2004ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் தனசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் ரவுடியான காளியை கொலை செய்தனர். அதன் பின்னர் தனசேகர் தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கொலை, கொள்ளை ஆட்கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காளியின் நெருங்கிய நண்பரான ரமேஷ், தனசேகரை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று சுற்றி வலம் வந்துள்ளார். இதனால் தனசேகருக்கும், ரமேஷுக்கும் இடையே தற்போது வரை விரோதம்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பிரபல ரவுடியான தனசேகர்  செங்குன்றத்தை சேர்ந்த கருப்பு ராஜா  மற்றும்  எண்ணூரை சேர்ந்த ஜேம்ஸ் ஆகியோரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி. போலீசுக்கு பயந்து தற்போது திருச்சியில் உள்ளார். அவ்வப்போது தனசேகரன் கூட்டாளிகளை, ரமேஷின் கூட்டாளிகள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. குண்டடிபட்டு காயமடைந்த செந்தில் தனது மனைவியை கொலை செய்த வழக்கில்  கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்தவர். நன்னடத்தையின் காரணமாக சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : encounter ,Nudrey: Another Ruddy ,Udi ,Chennai , Ennore, drunk, rowdy, shoot, Ooty
× RELATED மனைவி தயாரிப்பில் பாபி சிம்ஹா நடிக்கும் தடை உடை