சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் சப்ளை: பெரியபாளையம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்க அமைச்சர் ஆய்வு

சென்னை: மாகரல் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தை  உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நேற்று ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக  தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  ஒரு குடம் தண்ணீர் பிடிக்க பெண்களும், ஆண்களும் படாத பாடுபட்டு வருகின்றனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10, ரூ.20 என பணம் கொடுத்து வாங்குகிறார்கள். இந்நிலையில், தமிழகம் முழுவதும் எங்கும்  தண்ணீர் தட்டுப்பாடு  இல்லை என  உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று முன்தினம் கூறியுள்ளார். ஆனால் நேற்று பிற்பகல்  தாமரைப்பாக்கம் அடுத்த மாகரல் பகுதியில் உள்ள சென்னைக் குடிநீர்  நீரேற்று நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :10 ஆண்டுகளாக சோதனை நிகழ்ந்து வருகிறது. தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் வறட்சி, வெயில் தாக்கம் காரணமாக நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. சென்னைக்கு தொடர்ந்து  லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்து வருகிறோம்.  மேலும் தண்ணீர் பிரச்னைக்காக காஞ்சிபுரம், பரங்கிமலை பகுதியில் உள்ள கல் குவாரி நீர் ஐஐடி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரயில் மூலம் வெளி மாவட்டங்களில் இருந்தும் அவசியம் ஏற்பட்டால் சென்னைக்கு நீர் எடுத்து வரப்படும்.  இந்த தண்ணீருக்காக விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படும். பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு கிடையாது. குடிநீர் பிச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை வைத்து மிகைப்படுத்தி பேசிவருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாய ஆழ்துளை கிணறுகளில் இருந்து 13 மையங்களில் இருந்து 110 எம்எல்டி குடிநீர் செங்குன்றம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சென்னைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. தற்போது 525 மில்லியன் லிட்டர் தண்ணீர்  விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீரை நிறுத்தி விட்டனர்
அமைச்சர் காரில் ஏறியபோது, அங்கிருந்த   விவசாயிகள், குடிநீர் நீரேற்று  நிலையத்திற்கு வழங்கப்படும் நீருக்கு 1000  லிட்டருக்கு ரூ. 2.50 காசு தான் தருகிறார்கள். அதை கூடுதலாக வழங்க வேண்டும்  என மனு கொடுத்தனர். முன்னதாக விவசாயிகள் தாங்கள் கேட்ட தொகையை தண்ணீருக்காக தராததால் தாங்கள் நீரேற்று நிலையத்திற்கு வழங்கி வந்த தண்ணீரை திடீர் என நிறுத்தி விட்டனர். இதையறிந்த  அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

மாகரல் நீரேற்று நிலையம் எப்படி?
பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம்  அடுத்த மாகரல் கிராமத்தில் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நீரேற்று நிலையம்  உள்ளது. இந்த நீரேற்று நிலையத்திற்கு அரசு மூலம் திருவள்ளூர், பூண்டி,  தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து 47  இடங்களிலிருந்தும்,  தனியார் (  விவசாயிகள் ) மூலம் அத்தங்கி, காவனூர், மாகரல், கீழானூர், தாமரைப்பாக்கம்  ஆகிய பகுதிகளிலிருந்து 316 போர்  மூலமும் மாகரல் நீரேற்று நிலையத்திற்கு  குடிநீர் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தேக்கி வைக்கப்படுகிறது. ஒரு  நாளைக்கு 60 எம்.எல். குடிநீர் ( அதாவது  6 கோடி லிட்டர் ) தண்ணீர் புழல்  பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி  வைக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது.


Tags : Inspectorate ,Chennai ,area ,Periyapalayam , Minister for Railways, Water Supply, Periyapalayam, Chennai
× RELATED பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து சரிவு