பீட்சாவில் இரும்பு கம்பி பிரபல கடைக்கு 25 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  நீலகிரி மாவட்டம், முலிகூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி, சென்னை தி.நகரில் உள்ள பிரபல பீட்சா கடையில் மீடியம் வெஜ் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இரவு 10.45 மணிக்கு  டெலிவரி செய்து, ₹662 பணம் வாங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து சங்கர் பீட்சாவை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனை கடித்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, கடினமான பொருளை கடித்தார்.  என்னவென்று பார்த்தபோது, பீட்சாவில் இரும்பு கம்பி இருந்துள்ளது. இதனால், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும், அதனால் 2 முதல் 5 பற்கள் ஆட்டம் கொடுத்து உடைந்துள்ளது. இதையடுத்து அவர் பீட்சா கடையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை  என்று கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சங்கர் ₹5 லட்சம் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் பீட்சா கடை தவறு செய்துள்ளது, நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே பீட்சாவின் விலை ₹622 மற்றும் மன உளைச்சலுக்கு ₹25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர்.


Tags : shop , Iron rod , pizza, 25 thousand ,Consumer court ,order
× RELATED இடிந்து விழும் நிலையில் நியாய விலை கடை