×

பிரதமர் உதவியாளர் என கூறி 1 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட நபர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கீழ்க்கட்டளை காந்தி நகரை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் நேற்று அளித்த புகார் மனு ஒன்று அளித்தார். அதன்பிறகு சுரேஷ்பாபு நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:எனது மூத்த சகோதரர் கண்மதி மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனது சசோதரன் போல் யாரும் அந்த நோயால் இறக்க கூடாது என்று ‘கண்மதி’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு உதவ அறக்கட்டளை ஒன்று  தொடங்கினேன். அப்போது போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற சவுந்தரராஜன் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம் அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதன்படி  அவருடன் நான் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் சகோதரர் என்று அறிமுகம் செய்து கொண்ட ரவிந்தரபாபுவை தி.நகர் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்து அறக்கட்டளை தொடர்பாக பேசினோம். அப்போது அறக்கட்டளைக்கு மத்திய அரசு பரிந்துரைப்படி ரூ.50 கோடி பெற்று தருவதாக உறுதி அளித்தனர். பிறகு பணத்தை பெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவியாளராக உள்ள ஹோடா ஐஏஎஸ் என்பவரிடம் பேசினார்கள்.  அவரிடம் என்னையும் பேச வைத்தார்கள். அவர் தற்போது பணம் மதிப்பிழப்பு ெசய்யப்பட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து பல்வேறு அறக்கட்டளைக்கு சேர வேண்டிய ரூ.2000 கோடி மத்திய அரசு முடக்கி உள்ளது. இந்த பணத்தில் இருந்து ரூ.50  கோடி பெற்று தருவதாக என்னிடம் உறுதி அளித்தார். அதை உறுதி படுத்தும் வகையில் போலியாக உருவாக்கப்பட்ட சில ஆவணங்களையும் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு சவுந்தரராஜன் என்னிடம் வங்கி கணக்கு மூலம் ரூ.37 ஆயிரம் பணம் பெற்றார். பிறகு நேரடியாக பிரதமர் உதவியாளர் ஹோடா மற்றும் ரவிந்தர பாபுவுக்கு கொடுக்க வேண்டும் என்று ரூ.63 ஆயிரம் பணத்தை ரொக்கமாக பெற்றார்.  ஆனால் சொன்னப்படி எனது அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி பெற்று தரவில்லை. அதன் பிறகு பிரதமர் உதவியாளர் என்று பேசிய ஹோடா என்னை தொடர்பு கொண்டு பல வகையில் பணம் கேட்டார். ஆனால் நான் பணம் தர மறுத்துவிட்டேன்.  அதன் பிறகு ஹோடா மற்றும் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் சசோதரர் என்று பேசிய ரவிந்தர பாபு ஆகியோர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து பணத்தை வாங்கி சவுந்தரராஜனிடம் கேட்டால் எனக்கு  கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, பிரதமர் உதவியாளர் என்று கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : commissioner , scam , PM's assistant, commissioner, office
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...