பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து 2 நாட்களில் 3.5 லட்சம் அபராதம் : மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து கடந்த 2 நாட்களில் ₹3.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை  கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சட்டதிருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி  தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 17ம் தேதி 1831 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு 832 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  சம்மந்தப்பட்ட கடைக்காரர்களிடம் ₹2.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ேநற்று 1734 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1092 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ₹1.38  லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் ₹3.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : consumers , plastic,fine ,Corporation action
× RELATED தஞ்சையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்