×

மகள் திருமண ஏற்பாட்டுக்கு பரோல் கேட்டு மனு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நளினி வாதிட சம்மதமா? அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பரோல் கோரிய மனு மீதான விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி வாதிட நளினிக்கு ஆட்சேபனை உள்ளதா என்று அவரிடம் தகவல் பெற்று தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக  சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையில் தான் நேரில் ஆஜராகி வாதிட அனுமதியும் கோரியிருந்தார்.  இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நளினி நேரில் ஆஜராவதில் என்ன சிக்கல் உள்ளது என்று அரசுத் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் பல  சிக்கல்கள் உள்ளன. அவரது பாதுகாப்பிற்காக 25 காவலர்கள் வரை அனுப்பி வைக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை எவ்வாறு தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என்று எப்படி கூற முடியும் என்றனர்.

அப்போது, நளினியை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.  இதைக்கேட்ட நீதிபதிகள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி வாதிட நளினி தயாரா என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள். அவரின் முடிவை வைத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.



Tags : Government ,High Court , Daughter Marriage, Parole, Nalini, Government, Icort Order
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...