×

நடிகர் சங்க தேர்தலை பற்றி கவலை இல்லை தேர்தலை வேறு ஒரு இடத்தில் நடத்தலாமா? விவரம் தெரிவிக்க நடிகர் சங்கத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை வேறு இடத்தில் நடத்துவது குறித்து தெரியப்படுத்துமாறு நடிகர் சங்கத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்க பொதுச்ெசயலாளர் விஷால்,   “சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் போலீசார் சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், விஷால் அணிக்கும், எதிரணிக்கும் பிரச்னை உள்ள சூழலில் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், அன்றைய தினம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்; அமைச்சர்கள் குடியிருப்புகள், நீதிபதிகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ள பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.  

 வேறு இடத்திற்கு மாற்ற பரிந்துரைக்கும்படி சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இன்ஸ்பெக்டர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸ் அனுமதி பெற்றால் தான் தேர்தலை நடத்த முடியும் என்று சத்யா ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. எனவே, நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை ஏன் தேர்வு செய்யக்கூடாது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி  போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்யலாமே. எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நடிகர் சங்க தேர்தலை பற்றி கவலையில்லை. மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்த எங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்தார். அதற்கு விஷால் தரப்பு வக்கீல், வெகு தொலைவில் உள்ள இடத்தில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தலை வேறு இடத்தில் நடத்துவது குறித்து நாளை (இன்று) தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தின் தரப்புக்கு உத்தரவிட்டார்.



Tags : actor ,association election ,court , Actor's Association Election, Icort
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி