×

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு என கைது கோவையை சேர்ந்த 2 பேரிடம் 5 நாள் காவலில் விசாரணை: என்ஐஏக்கு கொச்சி கோர்ட் அனுமதி

கோவை: என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கோவையை சேர்ந்த இரண்டு பேரை ஐந்து நாள் காவலில் விசாரிக்க கொச்சி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர்களிடம்  விசாரணை நடந்து வருகிறது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி கோவை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன்(32), சதாம் உசேன்(26), அக்ரம் ஜிந்தா(26),அபுபக்கர் (29), இதயத்துல்லா(38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

அதன்பின் முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தெற்கு உக்கடம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த சேக் இதயத்துல்லா(38) என்பவரை என்.ஐ.ஏ. போலீசார் கடந்த 14ம் தேதி கைது செய்தனர். 2 பேரும் கேரள சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் பகுதியை சேர்ந்த சதாம், உமர் பாரூக், ஜனோபர் அலி, பெரோஷ்கான், முபின் ஆகிய 5 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அதன் பின் சதாம் என்ற வாலிபரை விடுவித்தனர். ஜனோபர் அலி, பெரோஷ்கான், முபின் ஆகிய 3 பேரை கொச்சி என்.ஐ.ஏ.அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். ஏற்கனவே அங்கு சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா, அபுபக்கர், இப்ராஹிம் ஆகியோர் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.

மொத்தம் 7 பேரிடம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகிய 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க  கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 2 பேரையும் 5 நாள் காவலில் விசாரிக்க நேற்று முன்தினம் அனுமதி அளித்தார். அவர்களிடம் வரும் சனிக்கிழமை வரை விசாரணை நடைபெற இருக்கிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் மேலும் சிலர் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.



Tags : terrorists ,ISIS ,Kochi , ISIS militants, contact, file, NIA
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...