ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு துப்புரவு பணியாளர் நியமனத்துக்கும் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும்

மதுரை: துப்புரவு பணியாளர் உள்ளிட்ட கடைநிலை பணி நியமனங்களுக்கும் எழுத்துத்தேர்வு நடத்தும் வகையில் தலைமை செயலர் வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, நாட்டின் முன்னேற்றத்திற்கு திறனற்ற நிர்வாகம் கரும்புள்ளியாக உள்ளதாக வேதனை தெரிவித்தார். தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த உதயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாற்றுத்திறனாளியான நான், கடந்த 1998ல் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினேன். இதன்பிறகு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ஆனால், பதிவில் என்னை விட இளையவரான ஒருவர், கடந்த 9.2.2011ல் காமயகவுண்டன்பட்டி யூனியனில் இரவு காவலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்பே பதிவு செய்து காத்திருந்த எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

யூனியன் அலுவலக அதிகாரி, தனது உறவினருக்கு விதிகளை மீறி வேலை வாய்ப்பு அளித்துள்ளார். எனவே, அந்த நியமனத்தை ரத்து செய்து, என்னை இரவு காவலர் பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:  இந்த வழக்கை பார்க்கும்போது, இதுபோன்ற பணி நியமனங்களில் நியமன விதிகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்பது தெரிய வருகிறது. உரிய விதிகள் இல்லாததால் உயர் பதவியில் இருப்போர், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தங்களுக்கு வேண்டியவர்களை பணிகளில் நியமிக்க வாய்ப்புள்ளது. குரூப் 4 மற்றும் கடைநிலை பணிகளில் விதிகளுக்கு உட்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்ட தொழிலாளர்கள் போன்ற பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களையும், ஒரு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கின்றனர்.

இதுபோன்ற ஊழல் முறை தடுக்கப்பட வேண்டும். எனவே, தகுதியான பணியாளர்களை தேர்வு செய்வது அவசியம். சத்துணவு அமைப்பாளர், இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் தமிழகத்தை பொருத்தவரை நேர்முகத்தேர்வு அடிப்படையிலேயே நிரப்பப்படுகிறது. பொதுநிர்வாகத்தின் அடிப்படை பணியாளர் தேர்வு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறாது. நேர்மையற்ற முறையில் பணி நியமனம் பெறுவோரிடம்  எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு திறனற்ற நிர்வாகம் கரும்புள்ளியாக உள்ளது. எனவே இவர்களை எழுத்து தேர்வு அடிப்படையில்  தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் பிறப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வழிகளில் நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பித்து, அதுகுறித்த அறிக்கையை ஜூலை 24ல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

× RELATED மெட்ரோ ரயில் நிலையங்களில் குப்பை...