திருவண்ணாமலை அருகே விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், பவர்கிரிட் நிறுவனம் இணைந்து, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களின் வழியாக வெளிமாநிலங்களுக்கு புதிய மின் வழித்தடங்களை அமைத்து வருகின்றன.
விவசாயிகளின் அனுமதியும், ஒப்புதலும் பெறாமல் ‘அவசரகால அத்தியாவசிய திட்டம்’ எனும் பொது அறிவிப்பின் மூலம் அத்துமீறி அமைக்கப்படும் ராட்சத உயர்மின் கோபுரங்களால், விளைநிலங்கள் பறிபோவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, விவசாயிகள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை தரிசாக்கும் இத்திட்டத்தை கைவிட்டு, நிலத்தடியில் கேபிள் மூலம் மின் வழித்தடம் அமைக்கும் மாற்று முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட மறுத்து, தொடர்ந்து பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் வழியாக வேலூர் மாவட்டம் திருவலம் வரை செல்லும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி, திருவண்ணாமலை அடுத்த குண்ணுமுறிஞ்சி கிராமத்தில் நடந்து வருகிறது. அதையொட்டி, அந்த கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைத்துள்ளனர். இந்நிலையில் அரசு தரப்பில் அறிவித்துள்ள இழப்பீடும் மிகக்குறைவாக உள்ளதால் விவசாயிகள் தரப்பில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உயர்மின் கோபுரங்களில் மின் வழித்தட கம்பிகள் அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் நேற்று குண்ணுமுறிஞ்சி கிராமத்துக்கு வந்தனர். இந்த தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஏற்கனவே மின் கோபுரங்கள் அமைத்த விளை நிலங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும், இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது, செல்போன் டவர்களுக்கு வழங்குவதை போல மாதாந்திர வாடகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, விவசாயிகள் பன்னீர்செல்வம், ஏழுமலை ஆகியோர் திடீரென உயர்மின் கோபுரங்களில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்தனர்.

அதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக, ஏடிஎஸ்பி வனிதா, டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, பழனி ஆகியோர் விரைந்து வந்தது, விவசாயிகளை சமாதானப்படுத்தினர். அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், மின் கோபுரத்தில் கம்பிகள் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு, மின் கோபுரத்தில் இருந்து விவசாயிகள் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

Tags : tower ,farms ,Thiruvannamalai , Thiruvannamalai, farmlands, high tower, peasants, struggle
× RELATED 100 நாள் திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி?:...