×

விருதுநகரில் அதிகாலையில் பரபரப்பு போலி பதிவெண் கொண்ட காரில் டம்மி துப்பாக்கியுடன் மர்ம நபர்கள்: தப்பிய 3 பேரை தேடும் பணி தீவிரம்

விருதுநகர்: போலி பதிவெண் காரில் டம்மி துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்களால் நேற்று அதிகாலை விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது. காரையும், துப்பாக்கியையும் கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர், பட்டம்புதூரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தொடர்பு கொண்டு, ‘‘நெல்லை மாவட்டம், கயத்தாறு முள்ளிச்சேவல் பெட்ரோல் பங்கில், 3,500 மதிப்பிலான கார் டயரை வாங்கிவிட்டு பணம் தராமல் காரில் மூவர் தப்பி வருகின்றனர். அவர்களை டூவீலரில் விரட்டி வந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பிடிக்க முடியாமல் போகவே, எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த காரை பிடிக்க வேண்டும்’’ என்றனர்.

 இதையடுத்து விருதுநகர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சாத்தூர் அருகே டோல்கேட்டில் வேகமாக சென்ற காரை போலீசாரால் நிறுத்த முடியவில்லை. பின்னர் விருதுநகரில் வச்சக்காரப்பட்டி, கலெக்டர் அலுவலகம் முன்பிருந்த பேரிகார்டுகளை தள்ளிவிட்டு வேகமாக சென்ற காரை, விருதுநகர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரட்டி வந்தனர். மாவட்ட விளையாட்டு அரங்கு எதிரில் உள்ள சர்வீஸ் சாலையில் பாலத்திற்கு கீழ் செல்ல வழியில்லாததால் மர்ம நபர்கள் காரை நிறுத்தினர். பின்னால் போலீசார் விரட்டி வருவதை கண்ட காரில் இருந்த 3 பேரும், காரை நிறுத்திவிட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு பின்புறம் இருக்கும் முட்புதருக்குள் நுழைந்து அதிகாலை 4 மணியளவில் தப்பி ஓடினர்.

போலீசார் காரை சோதனையிட்டதில், கேரளாவில் பதிவு செய்த காரின் பதிவெண்ணை ஸ்டிக்கர் ஒட்டி கர்நாடகா பதிவெண் கொண்ட காராக மாற்றியதும், காருக்குள் பால்ரஸ் போட்டு சுடும் டம்மி துப்பாக்கி இருந்ததும் தெரிந்தது. உடனே காரையும், டம்மி துப்பாக்கியையும் சூலக்கரை போலீசாரிடம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த சூலக்கரை போலீசார், கேரள பதிவெண் உடைய கார் யாருக்கு சொந்தமானது, துப்பாக்கியுடன் காரில் வந்த 3 பேர் யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Virudhunagar ,persons , Virudhunagar, fake record, gun
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...