×

திண்டுக்கல்லில் வழக்கறிஞர் மீது தாக்குதல் காத்திருப்போர் பட்டியலுக்கு பெண் இன்ஸ்பெக்டர் மாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வழக்கறிஞரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் திருமணம் செய்த போலீஸ்காரர்  மனோஜ்குமார், சத்யா ஆகியோருக்கு  இன்ஸ்பெக்டர் வசந்தி நேற்று முன்தினம் கவுன்சலிங் செய்தார். பெண் வீட்டார் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் தியாகு, போலீஸ் ஸ்டேஷன் வந்தார். அப்போது இன்ஸ்பெக்டருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் வசந்தியை தாக்கியதாக வக்கீல் தியாகுவை, திண்டுக்கல் வடக்கு ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதுபற்றி தகவலறிந்ததும் ஏராளமான வழக்கறிஞர்கள் அங்கு திரண்டு வந்தனர். வசந்தி தாக்கியதில் தியாகு காயமடைந்துள்ளதாகவும், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தியாகு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர்.

தகவலறிந்ததும் கூடுதல் எஸ்பி சுகாசினி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தியாகு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்பு வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டு திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று முற்றுகையிட்டனர். அங்கு வசந்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவும். சஸ்பெண்டு செய்யவும் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி சக்திவேல், வழக்கறிஞர்களிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. போராட்டம் நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. பின்னர் டிஐஜி ஜோஷி நிர்மல் குமார், இன்ஸ்பெக்டர் வசந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி வசந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வசந்தி, தியாகு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பழநி கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு ஒன்றானது, ஒன்று ‘ரெண்டானது’
மதுரையை சேர்ந்தவர் மனோஜ்குமார் (30) இவர் திருவண்ணாமலையில் போலீசாக உள்ளார். இவர் தனது தங்கையின் தோழியான திண்டுக்கல்லை சேர்ந்த சத்யாவை (26) காதலித்து திருமணம் முடித்துள்ளார். திருமணமான 3 மாதத்தில் கருத்து வேறுபாட்டில் சத்யா பிரிந்து சென்றார். இந்நிலையில் மனோஜ்குமார், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் தனது காதலியை சேர்த்து வைக்குமாறு மனு அளித்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி கவுன்சலிங் கொடுப்பதற்கு இருவரையும் அழைத்து இருந்தார். கவுன்சலிங்கில் பெண்ணுக்கு ஆதரவாக பேசுவதற்கு வழக்கறிஞர் தியாகு அனுமதிக்கப்படவில்லை. இதனால்  போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதை பார்த்து பயந்து போன காதல் ஜோடி இணைந்து வாழ்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். காதலனுடன் சேர்ந்து வாழ மதுரைக்கு சத்யா சென்று விட்டார். காதலர்களை சேர்த்து வைக்க முயற்பட்ட போலீசாரும், வழக்கறிஞர்களும் தற்போது இரண்டுபட்டு நிற்கின்றனர்.

Tags : woman inspector transition ,lawyer ,Dindigul , Female,Inspector Transfer, Attorney Waiting ,List , Dindigul
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...