தெலங்கானாவுக்கு புதிய தலைமை செயலகம்: நாளை மறுதினம் அடிக்கல் நாட்டுவிழா

ஐதராபாத்:  தெலங்கானாவிற்கு புதிதாக தலைமை செயலகம் கட்டுவதற்கு நாளை மறுதினம் முதல்வர் சந்திரசேகர ராவ் அடிக்கல் நாட்டுகிறார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதியில் பிரமாண்ட தலைமை செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், ஐதராபாத்தில் பழைய தலைமை செயலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட சில கட்டிடங்களை ஆந்திர அரசு பயன்படுத்தி வந்தது. இந்த கட்டிடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைக்கும்படி சமீபத்தில் ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசால் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடங்களில் உள்ள அலுவலகங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இன்று தெலங்கானா அரசிடம் இந்த கட்டிடங்கள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா அரசு புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்து  வந்தது. இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய தலைமை செயலக கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. புதிய தலைமை செயலகத்தின் மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் காலீஸ்வரம் நீர்பாசன திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து புதிய தலைமை செயலகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Chief Secretariat ,Telangana , New Secretariat,Telangana, Tomorrow's,Restoration
× RELATED தலைமை செயலக பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு