ஒரே நாடு; ஒரே தேர்தல் அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் மட்டுமே சாத்தியம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

ஐதராபாத்: ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் பற்றி ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி நேற்று அளித்த பேட்டி:ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் கவர்ச்சிகரமாக தோன்றினாலும், நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளின் ஆட்சி காலத்துக்கு கெடு நிர்ணயித்து அரசியலமைப்பில் திருத்தம் செய்தால்தான் இது சாத்தியமாகும்.

ஏனென்றால், ஒரு மாநிலத்தில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் முடிந்திருக்கும். மற்றொரு மாநிலத்தில் நான்கரை ஆண்டுகள் முடிந்திருக்கலாம். இந்த வேறுபாடுகளை அகற்ற அனைத்து சட்டப்பேரவைகளின் ஆட்சி காலத்துக்கும் காலவரையறை நிர்ணயித்து திருத்தம் செய்யப்பட வேண்டும். தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் நாடு முழுவதற்கும் துணை ராணுவப்படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுவார்கள். அதனைக் கூட சமாளிக்கலாம். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவகாரங்களில் பல சிக்கல்கள் ஏற்படும். இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஒற்றுமை ஏற்படுமா என்பதை கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

× RELATED நாட்டு சர்க்கரை குக்கீஸ் (அல்லது) பிரவுன் சுகர்