×

மகாராஷ்டிராவில் உள்ள தாவூத்தின் பூர்வீக சொத்தை ஏலம் விட முடிவு

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீமுக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகீம் தற்போது பாகிஸ்தானில் இருக்கிறான். தாவூத் இப்ராகீம் குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக சொத்துக்கள், மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் கிராமத்தில் உள்ளன. அங்குள்ள பங்களாவை தாவூத் இப்ராகீமின் தந்தை இப்ராகிம் கஸ்கர் கட்டினார். இப்ராகீம் கஸ்கர் மும்பை போலீசில் பணியாற்றியவர். தற்போது தாவூத் இப்ராகீம் பங்களா மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. இந்த சொத்தை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள கடத்தல் மற்றும் வெளிநாட்டு அன்னிய செலாவணி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அதனை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து அதிகாரிகள் தாவூத் இப்ராகீமின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இது தவிர சோலாப்பூரில் இருந்து சொத்து மதிப்பீட்டு அதிகாரிகளும் சென்றுள்ளனர். இருதரப்பினரும் சேர்ந்து அந்த சொத்தின் மதிப்பு என்னவென்று முடிவு செய்வார்கள். அதன் பிறகு அந்த சொத்து ஏலம் விடப்படும். 2018ம் ஆண்டு மும்பையில் உள்ள தாவூத் இப்ராகீம் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது. அதனை ₹3.51 கோடிக்கு சைஃபி புர்ஹானி டிரஸ்ட் வாங்கியது. அதோடு நாக்பாடாவில் உள்ள தாவூத் இப்ராகீம் சகோதரி ஹசீனா பார்கருக்கு சொந்தமான வீடு ஒன்று ₹1.80 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தாவூத் இப்ராகீம் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டபோது பயத்தில் யாரும் வாங்க முன் வரவில்லை. ஆனால் இப்போது தாவூத் இப்ராகீம் சொத்துக்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் முன் வருகின்றனர். எனவேதான் தாவூத் இப்ராகீம் சொத்துக்களை ஏலம் விடுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Tags : Dawood ,Maharashtra ,auction , Decision ,auction off,Dawood's native,property Maharashtra
× RELATED அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக...