×

தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்னை எதிரொலி மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை: பள்ளிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் மூடப்படாமல் தடுக்கப்படுமா?

சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் சாலைகளில் தண்ணீர் குடம், கேன்களுடன் காலை முதல் இரவு வரை நடையாய் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பெல்லாம் சைக்கிள், மீன்பாடி வண்டி போன்றவற்றில் ஏழை எளியவர்கள் குடிநீரை பிளாஸ்டிக் குடங்களில் எடுத்து செல்வதையும், லாரியில் வரும் தண்ணீரை பிடிக்க குடுமிபிடி சண்டை போட்டதை தான் பார்த்து இருக்கிறோம். கார்கள் வைத்திருப்பவர்கள், அதை சுற்றுலா உள்பட முக்கிய நிகழ்–்ச்சிகளுக்கு பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது பல லட்சம் மதிப்புள்ள கார்களில் தண்ணீர் பிடித்து செல்லும் வாகனமாக சென்னையில் மாறிவிட்டது, இதுதண்ணீர் பஞ்சத்தின் உச்சத்தை காட்டுகிறது. மேலும் தண்ணீர் இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்து வருகின்றனர்.
தண்ணீர் இல்லாததால் சென்னையில் பல ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. தங்கும் விடுதிகளாக செயல்படும் மேன்சன்கள் தண்ணீர் இல்லாததால் மூடப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்னையின் உச்சக்கட்ட காட்சியாக, நேற்று முன்தினம் சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்த பள்ளியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். அதேபோன்று, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் அதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஒரு லாரி தண்ணீர் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகம் கொடுத்து வாங்கி வருகிறார்கள். அப்படியே பணம் கொடுத்தாலும் லாரி தண்ணீர் கிடைக்கவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். வீடுகளில், சம்பு (குடிநீர் தொட்டி) இருப்பவர்கள் லாரியில் தண்ணீர் வாங்கி இருப்பு வைத்து அதை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள். சம்பு இல்லாதவர்கள், பெரிய பெரிய பேரல்களில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் லாரிகள் மூலம் கூட அவர்களால் தண்ணீரை பெற முடியாது. அதுபோன்ற வீடுகளில் இருப்பவர்கள் வீட்டை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகள் மற்றும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீடுகளுக்கு விருந்தினர்கள் வர வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். இதனால், சொந்தக்காரர்கள் கூட வீடுகளுக்கு வர முடியாத நிலை உள்ளது.கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் தண்ணீர் பிரச்னை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில், சென்னை மற்றும் புறநகர் பகுதி உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னையை அரசு முழுமையாக சமாளித்து வருகிறது. எங்கும் தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், மேன்சன்கள், பள்ளிகள் மூடப்படவில்லை என்றார். இது அனைவரின் கோபத்துக்கும் ஆளாகி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர், பல்வேறு துறை செயலாளர்கள், உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். அப்போது, சென்னையில் இருந்தபடி தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தின் மூலம், தமிழகத்தில் தற்போது நிலவும் வரலாறு காணாத தண்ணீர் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க கப்பல் மற்றும் ரயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர் வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட சில சலுகைகள் அளிப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஆலோசனைக்கு பிறகாவது, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பதே தற்போது தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில், சென்னையில் வருங்காலங்களில் ஓட்டல்கள், மேன்சன்கள், பள்ளிகள் மூடப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Tags : Chief Minister ,collector ,Echo District ,hotels ,Tamil Nadu ,schools , Echoing unprecedented,water problem , Echoing District Collector,officials today,schools, hotels and mansions , closed?
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...