×

நிதி ஆயோக் கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக முதல்வர் பேசினார்

* தமிழக திட்டங்களுக்கு நிதி கோரினார்
* அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட முதல்வர் கூடுதலாக பேசினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்களும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்குபெற்று உரையாற்றிய இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக உரையாற்றியுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன் பிரதமர்  மோடியை சந்தித்து தமிழகத்தின் உடனடி தேவைகளை 29 தலைப்புகளில் தொகுத்து, கோரிக்கை மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்.  ஆசியாவிலேயே பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தினை தமிழ்நாட்டில் நிறுவிடவும், சென்னையின் குடிநீர் தேவைக்காக பேரூரில் 400 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க கோரியும், பொது விநியோக திட்டத்திற்காக மானிய விலையில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தினை மீண்டும் தொடங்க வேண்டும்.

பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய்க்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், மீனவர்களுக்கு உதவும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க வேண்டும், மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2க்கான நிதி உதவியை வழங்க வேண்டும், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும், மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழ்நாட்டிற்கான பங்கு நிலுவையினை வழங்க வேண்டும் என்பன போன்ற மிக அத்தியாவசியமான தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்தி முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உதவுமாறு கேட்டுக்கொண்டார். இத்தனை கோரிக்கைகளையும், பிரதமரிடமும், மத்திய அமைச்சர்களிடமும் முதல்வர் வலியுறுத்திய காரணத்தால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற ஆவன செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : finance minister ,crowd , Chief Minister ,spoke,time allotted , fund Aayog meeting
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...