‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை: தேர்தல் முடிவுக்கு பின் முதல் முறையாக கூடின

புதுடெல்லி: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், மீண்டும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஆலோசனை கூட்டத்திற்கான வியூகங்கள் குறித்து சோனியா தலைமையில் விவாதிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் மாறி, மாறி வருவதால் ஆண்டுதோறும் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், தேர்தல் செலவும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை நடத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்காக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து விவாதிக்க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினரை கொண்டுள்ள கட்சியின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் இன்று நடக்க உள்ளது. அதேபோல, அனைத்து எம்பிக்களுக்கும் பிரதமர் மோடி நாளை இரவு விருந்து அளிக்கிறார்.

இதில், 2022ம் ஆண்டு நாட்டின் 75 சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் 150ம் ஆண்டு விழா ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.இந்நிலையில், பிரதமரின் ஆலோசனை கூட்டத்திற்கு வியூகங்கள் வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தி உள்ளன. இக்கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை வகித்தார். பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு எடுத்து கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதில் முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் கடந்த ஆட்சியில் பாஜ அரசால் சில மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறையும் அதேபோல ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமரின் யோசனை தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் நேற்று மாலை தனியாக நடந்தது. இதில் ஐமு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவருமான சோனியா தலைமை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங், ஆனந்த் சர்மா, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம், பாஜவின் சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. யாருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்’’ என்றார். இதனால், சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

மம்தா புறக்கணிப்பு
பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கப் ேபாவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற மிக முக்கியமான விஷயம் குறித்து அவசர அவசரமாக எந்த முடிவும் எடுத்து விட முடியாது. இதுதொடர்பாக முதலில் அரசியலமைப்பு நிபுணர்கள், தேர்தல் ஆய்வாளர்கள், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். முதலில் அனைத்து கட்சிக்குள் வெள்ளை அறிக்கை கொடுத்து, போதுமான அவகாசம் வழங்கி, கருத்து தெரிவிக்க அழையுங்கள். அப்படி செய்தால் மட்டுமே எங்களால் எந்த பரிந்துரையையும் வழங்க முடியும்’’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடியின் பதவியேற்று விழா அழைப்பை நிராகரித்த மம்தா, நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி எந்த கருத்தும் தெரிவிக்கவில்ைல.

காங். மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
கடந்த முறை காங்கிரசின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த மல்லிகார்ஜூனா கார்கே இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், இம்முறை புதிய மக்களவை கட்சி தலைவராக மேற்கு வங்கத்தின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரளா தலைவர் கே.சுரேஷ், திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இதில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சோனியா தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல கட்சி கொறடாவாக கேரள எம்.பி கே. சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘அவர் சொன்னா மட்டும் போதுமா?’
‘எதிர்க்கட்சிகள் எண்ணிக்கையை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு மதிப்புமிக்கவை’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று கூறுகையில், ‘‘எண்ணிக்கை மட்டுமே ஜனநாயகத்தை தீர்மானிப்பதில்லை. அதை தீர்மானிப்பது ஆலோசனை, விவாதம், பேச்சுவார்த்தை ஆகியவை ஆகும். பிரதமர் கூறியபடி அவரது அமைச்சர்கள், எம்பிக்கள், கட்சியினர் நடந்து கொண்டால் நல்லதே. ஆனால் பெரும்பாலும் மோடியின் பேச்சுகளை அவரது கட்சியினர் அமல்படுத்துவதில்லையே?’’ என்றார்.

Tags : country ,Opposition parties ,election ,end , 'One country, Opposition parties,advised ,same election, first time since, election
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...