×

தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்திற்கு பலி 3 ஆனது: தண்ணீர் பிடிக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்த 3 வயது குழந்தை சாவு... புதுகை அருகே சோகம்

புதுக்கோட்டை: தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்திற்கு பலி 3 ஆனது. புதுகையில் ஒரு குழந்தையும் இறந்து உள்ளது. குடிநீருக்காக அடுத்தடுத்து நடைபெறும் பலியால், இன்னும் என்ன நடைபெறுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்  வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காலி குடங்களுடன் பெண்கள் தண்ணீருக்காக அலையும் பரிதாபம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையில் பல ஓட்டல்களில் மதிய சாப்பாடு இல்லை என்ற போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது. ஐடி நகரமான சென்னையில்  தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஐடி கம்பெனிகளுக்கு விடுமுறை அளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான கம்பெனிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன.

ஐடி கம்பெனிகளில் அனைத்து தளங்களிலும் செயல்பட்டு வந்த ரெஸ்ட் ரூம், இப்போது சில தளங்களில் மூடப்பட்டு உள்ளது. சில கம்பெனிகள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது. ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கோர்ட்டே நேரடியாக தலையிட்டு ராணுவ உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் என எச்சரித்தனர். ஆனாலும் தமிழக அரசு இந்த பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்மேலாண்மையில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. அரசும் இதில் உரிய அக்கறை காட்டவில்லை என்பதே இந்த அவலத்திற்கு காரணம். கடந்த ஆண்டு காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு 125 டிஎம்சி கடலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் கோர தாண்டவமாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் டெல்டா விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளனர். ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தண்ணீர் தட்டுபாடு நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீருக்காக மக்கள் அலையும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குடிநீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை–்இதனால் தமிழகத்தில் தினமும் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக  திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் 2 கொலைகள் நடந்து உள்ளது. தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. விளார் கிராமத்தில் பஞ்சாயத்து குடிநீரை தனது வீட்டில் பதுக்கிய டிரைவரை தட்டிக்கேட்டு சமூக ஆர்வலர் ஆனந்தபாபு(33) அடித்து கொல்லப்பட்டார். குடிநீருக்காக டெல்டாவில்  நடந்த முதல் கொலை இது. கடந்த வாரம்  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது உளுந்தங்குடியில்  தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில்  தனபால்(38) என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டு வாலிபர் பிரவீன் கைது செய்யப்பட்டார். குடிநீர் பஞ்சத்தால் ஏற்பட்ட 2வது கொலை இது.

கத்திக்குத்து இதேபோல் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் (40). இவர், தமிழக சபாநாயகரின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மோகன் (30) என்பவர் வீட்டில் 13ம் தேதி தண்ணீர் வராததால், குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அங்கு வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், தன்னிச்சையாக மோட்டாரை எப்படி இயக்கலாம் என கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை தட்டிகேட்ட மோகனின் மனைவி சுபாசினியின்(28) முகத்தில் ஆதிமூல ராமகிருஷ்ணன் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

குடிநீருக்காக 2 கொலை, ஒரு கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ள நிலையிலும்  அமைச்சர் வேலுமணி தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று கூறி உள்ளார்.  அவர் இந்த தகவலை சொன்ன நேற்று,  குடிநீர்  பிடிக்க தோண்டியிருந்த குழியில் விழுந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 வயது குழந்தை பலியாகி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில்  குடிநீர் சரியாக வராததால் பள்ளம் தோண்டி  குழாயை தாழ்வாக பதித்து அதில் இருந்து தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சமீபத்தில் பெய்த மழையால் அந்த குழியில் மழை நீர் தேங்கி இருந்தது. வைத்தூரை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் வெண்ணிலா தம்பதியரின் 3 வயது குழந்தை  பவதாரணி பக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த குழியில் விழுந்து இறந்து விட்டது. வெகுநேரம் கழித்து தான் பெற்றோர் குழந்தையை தேடியபோது குழந்தை அந்த குழியில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

குடிநீர் பிடிக்க தோண்டிய குழியில் விழுந்து குழந்தையும் பலியாகி உள்ளது. இதனால் குடிநீர் பிரச்னைக்கு பலி 3 ஆக உயர்ந்து உள்ளது. தண்ணீர் பிரச்னையால் தஞ்சை, திருச்சியில் நடந்த 2 கொலைகள், சென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம், குடிநீருக்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 3வயது குழந்தை இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 பேர் பலியான நிலையில் தமிழகத்தில் எங்கும் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி பேசியுள்ளதற்கு மக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : death ,Tamilnadu 3 , Drinking water, baby death, pudukku
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை