×

இயற்கை வளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக குமரியில் தெருக்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இயற்கை வளம் கெட்டு வருகிறது. எனவே அரசு உத்தரவுபடி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நிலம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன், சுகாதார கேடும் ஏற்படுகிறது. பிளாஸ்டிகள் கழிவுகளால் ஆறுகள், குளங்கள் அழிவை நோக்கி செல்கின்றன. இயற்கை வளத்தை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

தடை விதிக்கப்பட்ட சில நாட்கள் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதால் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு குறைந்திருந்தது. பின்னர் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால் பிளாஸ்டிக் மீதான நடவடிக்கைகள் குறைந்தது. இதையடுத்து மீண்டும் பிளாஸ்டிக் தாராளமாக புழங்க துவங்கியது. பல இடங்களில் பூட்டப்பட்ட பிளாஸ்டிக் கப், தட்டு, கவர்கள் உற்பத்தி கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் குமரி மாவட்டத்தில் தற்போது பிளாஸ்டிக் கவர், கப் உள்ளிட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் இரு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளில் உள்ள கடைகள் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மிகப்பெரிய இடையூராக இருந்து வருகின்றன.

இதுபோன்ற இடங்களில் உள்ள கடை உரிமையாளர்கள் ஊராட்சி எல்லையை காரணம் காட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதோடு, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியதா நிலை ஏற்படுகிறது. குமரி மாவட்டத்தில் தாராளமாக புழங்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தெருக்களில் குவியல் குவியலாக வீசப்படுகிறது. இவற்றை சேகரிக்கும் சுகாதார பணியாளர்கள் ஆங்காங்கே சாலையோரம் போட்டு தீ வைத்து எரிக்கின்றனர். மேலும் பள்ளமான இடங்களிலும் கொட்டுகின்றனர். இவ்வாறு ஆற்றூர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் திருவட்டார் பாலத்தின் அடியில் பரளியாற்றின் கரையில் கொட்டப்பட்டு வருகிறது. இது அங்கு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதுபோன்ற செயல்களால் இயற்கை வளம் கெடுவதோடு, பெரும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது.

எனவே மறு சுழற்ச்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பயன்படுத்தி வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை முழுமையாக சேகரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் இருந்து சப்ளை
தமிழகத்தில் பிளாஸ்டிக்  பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தில் தடை  இல்லாததால் அங்கிருந்து உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருட்கள் பைக்குகளில்  ெகாண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பெட்டி கடைகள், மது பார்கள்  போன்றவற்றுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கில் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகளை பார்த்ததும் அங்கேயே பைக்கோடு விட்டு சென்ற சம்பவமும் நடந்தது. எனவே கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும்  பிளாஸ்டிக்கை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திற்பரப்பில் விழிப்புணர்வு
திற்பரப்பு பேரூராட்சி சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு மாற்றாக கரும்பு கழிவு, மக்காச்சோளம் போன்றவை மூலம் தயார் செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள், கப் போன்றவைகளை அலுவலகத்தின் வெளியே காட்சிக்கு வைத்துள்ளனர்

Tags : streets ,Kumari , Natural Resources, Kumari, Street, Plastic waste
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...