×

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கடும் எதிர்ப்பு: ரஷ்யா, ஜப்பானில் நடந்த விபத்துகளால் அச்சம்

சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு கிளப்பியுள்ளது. இதற்கு செர்னோபில், புகுஷிமாவில் நடந்த  விபத்துக்களே காரணமாக அமைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தலா 1,000  மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் ஏற்படுத்தப்பட்டு, மின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளில்  எரிபொருளாக ‘யுரேனியம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு, ‘புளூட்டோனியம்’ என்ற அணு கழிவு  உருவாகிறது. இவ்வாறு உருவாகும் கழிவு, அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமித்து வைக்கப்படுகிறது. குட்டையில் சேமிக்கப்படும் அணுக்  கழிவுகளை எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதனால் ‘புளூட்டோனியம்’ கழிவை, உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘அவே ப்ரம் ரியாக்டர்’ அணுக்கழிவு மையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்புக்  கூட்டம் ஜூலை 10ம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை  சேர்ந்த சுந்தர்ராஜன் கூறியதாவது: கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு  வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்  15 நிபந்தனைகளைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது.

அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும்  என்பதாகும். இந்த கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று  உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தேசிய அணுமின் கழகம் மனு தாக்கல் செய்தது. இந்த ஏஎப்ஆர் வடிமைமைப்பதிலுள்ள  தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம் என்றும் அதனால்தான் மேலும்  5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. மேலும் அதே மனுவில், இதைப்போன்ற மென்நீர் உலைகள்  இந்தியாவில் முதல்முறையாக  கூடங்குளத்தில் உள்ளதால் இதுமிகவும் சவாலான பணியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.  ஆனால், அணுக்கழிவுகளை  உலைகளுக்குள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

 ஆகவே ஏஎப்ஆர் கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்க  வேண்டும் என்பதால், இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டு ஏஎப்ஆர் மற்றும் டிஜிஆர் வசதிகளை ஏற்படுத்தி  முடிக்கும்வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத்தாக்கல்  செய்திருந்தோம். அந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை அமர்வு, கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை  பாதுகாப்பாக கையாள என்ன என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என 2018 ஜூலை முதல் வாரத்திற்குள் அணு உலை  ஒழுங்குமுறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் எனக் கூறியது.

அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூடங்குளம் அணுவுலையில் உள்ள ப்யூல் பூல் அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை  என்றும் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் ஏஎப்ஆர் வசதியைக் கட்டி முடித்துவிடுவோம் எனவும் கூறியிருந்தது. இதை  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2022க்குள் ஏஎப்ஆர் கட்டி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.இதன் தொடர்ச்சியாக கூடங்குளம்  வளாகத்திற்குள்ளாகவே ஏஎப்ஆர் வசதியைக் கட்டுவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலை  கருவூலம்” அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் தற்காலிக  வசதியை நம்பி தொடர்ந்து  கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு நம்மை ஆழ்த்தும் விஷயமாகும்.

கூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம்  முழுவதும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்க தொழில்நுட்பத்தை எந்த நாடுகளும் கண்டுபிடிக்க முடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது.  இந்நிலையில் சோதனை எலிகளாக தமிழ் மக்களை  மாற்றும் இந்த விபரீதமான விசயத்திற்கு, கூடங்குளத்தில் ஏஎப்ஆர் அமைக்க தமிழக அரசு  அனுமதி அளிக்கக்கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில்  இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிடவேண்டும். கடந்த ஆண்டே  வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம்தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை  விளைவிக்கும் இந்த முயற்சியை கைவிட வைப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும், கட்சிகளும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செர்னோபில், புகுஷிமா: ஒருங்கிணைந்த சோவியத்தில் செர்னோபில் உள்ளது. அங்குள்ள அணுஉலையில் அதீத வெப்பம் வெளியாகியுள்ளது. பிறகு  பெரும் சத்தத்தோடு உலை வெடித்தது. இதனால் பல லட்சம் பேருக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள்  ஏற்பட்டது. இன்றளவும் இந்த விபத்தின் தாக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதேபோல் ஜப்பானில் புகுஷிமாவில் அணு உலை உள்ளது. இங்கு  ஏற்பட்ட விபத்து இரண்டாவது மிகப்பெரிய விபத்தாகவுள்ளது. இதனாலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


Tags : center ,Koodankulam ,Russia ,accidents ,Japan , Kudankulam, Nuclear Center, Russia, Japan, Accident
× RELATED தொழில் மையத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு