ராகுல் காந்தி ஏற்க மறுப்பு: மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு

டெல்லி: மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மேற்கு வங்கத்தை சேர்ந்த எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று, மத்தியில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்களவை தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்றத்தின் (17வது மக்களவை) முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, வீரேந்திர குமார் தலைமையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. முதலில் பாரம்பரிய வழக்கப்படி, அனைத்து உறுப்பினர்களும் ஒருநிமிடம் எழுந்து நின்று மவுனத்தை கடைபிடித்தனர். இதையடுத்து, புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் மோடி வாரணாசி நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யாக பதவியேற்றார். தொடர்ந்து மற்ற எம்.பி-க்கள் பதவியேற்றனர். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்கள் பதவியேற்றனர். தொடர்ந்து 19-ம் தேதி சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் 20ம் தேதி நடக்கும் கூட்டுக்கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றுவார். ஜூலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இக்கூட்டத்தொடர் அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடக்கும்.

இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. ஆனாலும், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு இரண்டாவது முறையாக பறிபோனது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மக்களவை எம்.பி.,க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவியை ஏற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rahul Gandhi ,Adir Ranjan Chowdhury ,Lok Sabha , Rahul Gandhi refuses to accept Lok Sabha congress Adir Ranjan Chaudhry, Exam
× RELATED வயநாட்டில் பாம்பு கடித்து இறந்த...