×

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் : முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஜெயலலிதாவுக்கு ரூ.50.08 கோடி செலவில் நினைவிடம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.50.08 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி இருந்தது. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்டு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நினைவிட கட்டுமான பணியில் 10 பகுதி வேலைகளில் 8 பகுதி வேலைகள் ஓரளவு முடிந்துள்ளது. இதுதவிர நடைபாதை, வாகன நிறுத்துமிடம் பணிகளும் முடிவடைந்துள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி அங்கு நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

இதையடுத்து செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது என்றும்  இன்னும் 5 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் பழனிசாமி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இயற்கை பொய்த்துவிட்டது, பருவமழை போதிய அளவு பெய்யாததால் மிகுந்த வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும். எங்கெல்லாம் குடிநீர் பிரச்னைகளோ அங்கெல்லாம் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் தேவையான அளவு குடிநீர் வழங்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் முதல்வர் கூறியதாவது,ஒரு இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பதுபோல் மாயை ஏற்படுத்த வேண்டாம்; இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துதான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது;குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது;குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.


Tags : Palani ,Tamil Nadu , CM, Edappadi Palanisamy, Water Famine
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை