×

காணொலி காட்சி மூலம் ஆஜராகி வாதிட நளினிக்கு ஆட்சேபனை உள்ளதா?: அரசு அறிந்து தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : பரோல் கோரிய மனு மீதான விசாரணையில் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வாதிட நளினிக்கு ஆட்சேபனை உள்ளதா என அவரிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். பரோல் கேட்ட வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிடவும் நளினி அனுமதி கோரியிருந்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதி நளினி பரோல் கேட்டு மனு


ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் நளினிக்கு பரோல் கொடுக்க வேலூர் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. சிறை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமனறத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2000ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் இதுவரை 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது என மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தாமே வாதாட அனுமதிக்க வேண்டும் எனவும் நளினி கோரிக்கை

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வழிவகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு ஒரு பரோல் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனு மீது, வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலனை செய்யவில்லை எனவும், எனவே இந்த மனு விசாரணைக்கு வரும் போது, வழக்கறிஞர் இல்லாமல் தாமே வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டம் -ஒழுங்கு பிரச்சனை உள்ளதாக அரசு தரப்பு வாதம்

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது? என்று தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.மேலும் கூடுதல் பாதுகாப்பு அளித்து நேரில் ஆஜர்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

சிறைத்துறைக்கு உத்தரவு

இந்நிலையில் இந்த வழக்கு இயன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நளினியை ஆஜர்ப்படுவதில் நடைமுறை சிக்கல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ப்படுத்த இயலாது எனவும் அதே நேரம் அவரை சிறையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசு தரப்பு விளக்கத்தை தொடர்ந்து, அடுத்த வாரத்திற்குள் நளினியிடம் தகவல் பெற்று தெரிவிக்குமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நளினியின் முடிவை வைத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இதனிடையே காணொலி காட்சி மூலம் ஆஜராக நளினி விருப்பம் தெரிவிக்க மாட்டார் என்று அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.



Tags : Nalini , Rajiv murder, Nalini, HC, Tamil Nadu government, parole
× RELATED ராஜிவ்காந்தி கொலை வழக்கில்...