×

நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் ஊழியர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? : உயர்நீதிமன்ற நீதிபதி தாக்கு

மதுரை : நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் ஊழியர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பணிமூப்பு அடிப்படையில் தனக்கு பணி வழங்காமல் சிபாரிசு மூலம் மற்ற நபருக்கு பணி வழங்கி உள்ளதாக தேனியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல்

அந்த மனுவில் கடந்த 2011ம் ஆண்டு சேகர் என்பவர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக பணியில் நியமனம் செய்யப்பட்டார். 8ம் வகுப்பு படித்த நான், 1998ம் ஆண்டிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். ஆனால் எனக்கு பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சேகருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சேகரின் நெருங்கிய உறவினர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பணி புரிகிறார். ஆதலால் அந்த பணி எனக்கு வழங்கப்படவில்லை. எனவே பஞ்சாயத்து யூனியன் அலுவலக பணியை தனக்கு வழங்க வேண்டும் வேண்டும். முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட சேகரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.  

நீதிபதி சரமாரி கேள்வி

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, சேகரின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய நீதிபதி, நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும் அரசு ஊழியர்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? திறனற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு கரும் புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. துப்புரவு மற்றும் தோட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கும் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய வழிகாட்டுதல்களை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும். என்று உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 24ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.


Tags : judge ,High Court , High Court, Madurai Branch, Writing Selection, Writing Selection
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...