பரமக்குடி - சாயல்குடி மாநில நெடுஞ்சாலையில் அவசரகதியில் மராமத்து பணியால் முதல் நாளே சேதமடைந்த அவலம்

சாயல்குடி: பரமக்குடி - சாயல்குடி மாநில நெடுஞ்சாலை மராமத்து பணிகள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி - தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை செல்லும் பரமக்குடி - முதுகுளத்தூர், முதுகுளத்தூர் - கடலாடி சாலைக்கு கடந்த 2017ம் ஆண்டு புதிதாக சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. சாலை ஆய்வுக்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு மேல் சாலை போடாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் சேதமடைந்த அந்த சாலையை சீரமைத்து, புதிய சாலை அமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது. கடலாடி அருகே வேப்பங்குளம், மேலச்சாக்குளம், முதுகுளத்தூர் அருகே மகிண்டிவிலக்கு, பாம்பூர் உள்ளிட்ட இடங்களில் புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பகல் நேரங்களில் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் அவசரகதியில் சாலை அமைப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணி நடக்கும் போதே வாகனங்கள் ஏறி செல்வதால் சாலை சேதமடைந்து வருகிறது. இதில் அளவு உயர்த்தப்பட்ட சாலையின் இருபுறமும் கிராவல் மண் போடாததால் இரு வாகனங்கள் விலகும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்கள், சிறியரக கார்கள் பக்கவாட்டிலிருந்து இச்சாலையில் ஏறமுடியாத நிலை உள்ளது.

மேலும் புதிய சாலையின் ஓரம் வேப்பங்குளம், பாம்பூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன, சாலையோரம் உள்ள வீடுகளிலிருந்து வந்து செல்ல முடியாமல் குழந்தைகள், முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை தரமற்று இருப்பதால் சாலை மற்றும் சாலையோரங்களில் அரிமானம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது, முன்னெச்சரிக்கை கற்கள், அறிவிப்பு பலகைகள் பெயர்ந்து கிடக்கிறது.இச்சாலையை போட்ட ஒப்பந்த நிறுவனம் 5 வருடம் பராமரிக்க வேண்டும். ஆனால் சாலை போடப்பட்டு ஓராண்டிற்குள் முதுகுளத்தூர் முதல் கடலாடி மலட்டாறு வரையிலும், முதுகுளத்தூர் முதல் பாம்பூர் வரையிலும் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் சீரமைக்காமல், சாலை பணியாளர்களை கொண்டு பெயரளவிற்கு சீரமைத்து வருகின்றனர் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். மழை பெய்தால் சாலை முற்றிலும் சேதமடைந்துவிடும் அபாயம் இருப்பதால் சாலைகளை முறையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED முல்லை பெரியாறு அணையின்...